ஆதியாகமம் 3,4

1 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

2 ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்.

3 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.

4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை.

5 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

6 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.

7 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

8 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

9 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.

10 அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

11 அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.

12 அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.

13 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரியை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.

14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்.

15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

16 அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய். உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.

17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

18 அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும். வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.

19 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

20 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான். ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.

21 தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.

22 பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான். இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றென்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,

23 அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

24 அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.

ஆதியாகமம் 4

1 ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான். அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

2 பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.

3 சிலநாள் சென்றபின், காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.

4 ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார்.

5 காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கீகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.

6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?

7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும். அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.

8 காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான். அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.

9 கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார். அதற்கு அவன்: நான் அறியேன். என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.

10 அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.

11 இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.

12 நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது. நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.

13 அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.

14 இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர். நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன். என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.

15 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.

16 அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.

17 காயீன் தன் மனைவியை அறிந்தான். அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள். அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.

18 ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான். ஈராத் மெகுயவேலைப் பெற்றான். மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான். மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.

19 லாமேக்கு இரண்டு ஸ்திரிகளை விவாகம்பண்ணினான். ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்கு சில்லாள் என்று பேர்.

20 ஆதாள் யாபாலைப் பெற்றாள். அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.

21 அவன் சகோதரனுடைய பேர் யூபால். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.

22 சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான். தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.

23 லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து, ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள். லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள். எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன். எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்.

24 காயீனுக்காக ஏழபழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.

25 பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள்.

26 சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான். அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்

0 Comments

Post a Comment

Post a Comment (0)