நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே

இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்”. - யோவான் 8:11

விபச்சாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும், பரிசேயரும் இயேசு கிறிஸ்துவினிடத்தில் அழைத்து வந்தார்கள். பழைய ஏற்பாட்டின் முறைமையின்படி அவளை கல்லெறிந்து கொல்லவேண்டுமென்றார்கள். சிறியோர் முதல் பெரியோர்வரை அனைவரும் ஆளுக்கொரு கல்லை ஆயத்தமாய் வைத்திருந்தார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ, “உங்களில் பாவமில்லாதவன் முதலில் கல்லெறியக்கடவன்” என்றார். இந்த வார்த்தை அவர்களின் இருதயத்தைக் குற்றப்படுத்தியதால் கற்களை கீழே போட்டுவிட்டு சென்றனர். அந்த ஸ்திரீ மாத்திரம் நின்று கொண்டிருந்தாள். தன் பாவ வாழ்வை உணர்ந்தவளாக, தன்னுடைய முறைகேடான வாழ்வை எண்ணி கண்ணீர் வடித்தவளாக நின்று கொண்டிருந்தாள். இயேசு கிறிஸ்து என்ன தண்டனை கொடுக்கப்போகிறாரோ என்று கலங்கின உள்ளத்தோடிருந்த  அவளைப் பார்த்து ஆண்டவர், “நானும் உன்னை நியாயந்தீர்ப்பதில்லை. போ, இனி பாவம் செய்யாதே” என்றார்.

எவ்வளவு அன்புள்ள ஆண்டவர் பார்த்தீர்களா? ஒரு மனிதன் பாவத்தில் விழுந்தவுடன் அவனை குற்றப்படுத்தவும், கூட்டத்திற்கு முன் அவமானப்படுத்தவும், தண்டிக்கவும் இவ்வுலகம் தாமதமின்றி ஆயத்தப்படுகிறது. ஆனால் ஆண்டவரோ, அம்மனிதனின் மனமாற்றத்திற்காக, மனந்திரும்புதலுக்காக தாமதம் செய்கிறார், காத்திருக்கிறார். தண்டியும், தண்டியும் என சூழ்ந்து நிற்பவர்கள் சொன்னாலும் ஆண்டவரோ எதையும் பொருட்படுத்தாமல் தரையில் எழுதி தாமதிக்கிறார். மனிதர்கள் அந்த ஸ்திரீயை பார்த்தவிதம் வேறு! இயேசுகிறிஸ்து அவளைப் பார்த்தவிதம் வேறு! இனி இவள் உயிரோடிருக்கக்கூடாது என அவர்கள் நினைத்தனர். இனி இவள் பாவம் செய்யக்கூடாது என ஆண்டவர் நினைத்தார். ஆம், நம்மைக் குறித்தும் தேவன் இப்படியே நினைக்கிறார்.

பிரியமானவர்களே! நாம் பாவத்திலே மரிப்பது தேவசித்தமல்ல. மனந்திருந்தி, மன்னிப்பைப் பெற்று பரிசுத்தமாய் வாழ்வதே தேவசித்தம். கிருபையாய் மன்னிக்கப்பட்ட நம்மிடம் ஆண்டவர் கூறும் காரியம், “இதுவரை உன் வாழ்வு எப்படி இருந்ததோ அதை நான் நினைப்பதில்லை. இனி துணிகரமாய் பாவம் செய்யாதே! உன் சரீரத்தை பாவத்திற்கு ஒப்புக்கொடுத்துவிடாதே! இனி உன் வாழ்வு பரிசுத்தமாகட்டும். இனி உன் வாழ்வு நான் விரும்புகிறபடி இருக்கட்டும். இனி உன் வாழ்வும் என் சித்தத்தை நிறைவேற்றட்டும்” என்றே கூறுகிறார். இனி உங்கள் வாழ்வு!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post