ஆண்டவருக்கு அதில் முதலிடம் கொடுக்கிறோமா? அல்லது விருந்து வைபவங்களுக்கா?

“கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்;…” – ஏசாயா 55:6

1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி லண்டன் தேம்ஸ் நதியில் ஒரு சொகுசு கப்பலில் 120 பேர் பயணம் செய்தனர். சில மணிநேரத்தில் கப்பல் விபத்துக்குள்ளாகி 51பேர் மரித்துப்போயினர். கப்பலில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இளைஞர்கள், பிரபல சினிமா நட்சத்திரங்கள், மாடல்கள், பெரிய பணக்காரர்கள். பிரபலமான ஒருவரின் பிறந்தநாளை கப்பலில் கொண்டாட சென்றவர்கள். பெரிய விருந்து, நடனம் என பெரிய அமர்க்களமாயிருந்த நேரத்தில் இரவு ஒருமணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது. விபத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால் இயேசுவுக்கு அங்கு இடமில்லை.

பெல்ஷாத்சார் என்ற இராஜா தன் பிரபுக்கள் ஆயிரம்பேருக்கு விருந்து செய்து, அந்த ஆயிரம்பேருக்கு முன்பாக திராட்சை ரசம் குடித்தான். (தானியேல் 5:1) எருசலேம் தேவாலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொன்பாத்திரங்களில் ராஜாவும், அவனுடைய பிரபுக்களும், அவனுடைய மனைவிமாரும் குடித்தார்கள். குடித்தது மட்டுமல்ல, பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல்லுமாகிய தேவர்களை புகழ்ந்தார்கள். அந்நேரத்தில்தான் தேவகட்டளை வந்தது. “உன் ராஜ்யம் முடிவுக்கு வந்தது, அது பிரிக்கப்பட்டு மேதியருக்கும், பெர்சியருக்கும்  கொடுக்கப்பட்டது”. அன்று இராத்திரியில்தானே பெல்ஷாத்சார் ராஜா கொலைசெய்யப்பட்டான். தேவனுக்கு கொடுக்கவேண்டிய கனத்தையும் மகிமையையும் அவன் கொடுக்கவில்லை. தேவனுக்கும் மேல் தன்னை உயர்த்தினான். முடிவு பரிதாபமானது.

பிரியமானவர்களே! நம்முடைய வீடுகளில் பல கொண்டாட்டங்கள் உண்டு. பிறந்தநாள் கொண்டாடாத வீடே இல்லை என்று கூறலாம். திருமண நினைவு நாட்கள் மற்றும் பிள்ளைகள் படித்து பட்டம் பெறும்போது, வெளிநாடுகளுக்கு  வேலைக்குச் செல்லும்போது பெரிய விருந்து கொடுக்கிறோம். இவை எல்லாவற்றிற்கும் “ஸ்தோத்திரக்கூட்டம்” என்ற தலைப்பை கொடுத்துவிடுகிறோம். எல்லாம் நல்லதுதான். ஆனால் ஆண்டவருக்கு அதில் முதலிடம் கொடுக்கிறோமா? அல்லது விருந்து வைபவங்களுக்கா? அல்லது நமது செழிப்பான உலக வாழ்வை உலகிற்கு அறிவிக்கவா? உங்கள் மனசாட்சி பதில் சொல்லட்டும்.

நமது வாழ்வில் முதலிடம் தேவனுக்கே கொடுக்கப்படட்டும். அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமென்ற யோவான் ஸ்நானனின் மனநிலை நம்மையும் நிரப்பட்டும். தேவனே நமது ஆசையாயிருக்கட்டும். ஆம், அவரே நமது வாழ்வின் மையமாயிருப்பாரென்றால், நமது வாழ்வு நமக்கு புகழ் சேர்ப்பதாயிராமல் தேவனுக்கே மகிமையை கொண்டுவருகிறதாயிருக்கும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post