கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்

கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;” – சங்கீதம் 138:8

ஒரு ஏழை குடியானவனின் குடிசைக்கு அருகில் ஒரு செல்வந்தரின் மாளிகையிருந்தது. இருவரும் ஒரே ஆலயத்திற்கு செல்பவர்கள். செல்வந்தரிடமுள்ள செல்வமும், மரண பயமும் அவரது தூக்கத்தை அடியோடு விரட்டின. யாராவது அவரிடம் கரிசனையோடும் அன்போடும் பேசினாலும் “என்னிடமுள்ள பணத்திற்காகத்தான் பேசுகிறான்” என்ற இவருடைய எண்ணத்தால் நண்பர்களையும் இழந்தார். தனிமையோடு அனுதினமும் போராடிய அவர், ஒரு நாள் அருகிலுள்ள குடியானவரிடம் பேச நேர்ந்தது. “எதிர்காலத்திற்காக எதையும் சேர்த்து வைக்காத போதிலும் நீ மகிழ்ச்சியாயிருக்கிறாயே எதைக் குறித்தும் உனக்கு கவலையில்லையா?” என்று கேட்டார். “கவலைப்பட எனக்கும் அநேக காரியங்கள் உண்டு. ஆனாலும் எல்லா கவலைகளையும் ஆண்டவரிடம் சொல்லிவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்ற விசுவாசத்தில், எனக்கு அன்றன்று கிடைக்கும் கூலி வேலையை முழுமனதாய் செய்கிறேன். என் வீட்டிலிருக்கும் உணவை திருப்தியாய் சாப்பிடுகிறேன், இரவில் களைப்பின் மிகுதியால் நிம்மதியாய் தூங்கிவிடுகிறேன்” என்றான். செல்வந்தர், “ஒரு மனிதனின் மகிழ்ச்சி அவனிடமுள்ள செல்வத்தாலல்ல, அவன் கர்த்தர் மேல் வைக்கும் நம்பிக்கையிலும், அவரை சார்ந்து வாழ்வதிலும்தான் உள்ளது” என்று உணர்ந்தார்.

எல்லாம் இருந்தும் எதுவுமில்லாததைப் போல் உணருபவர்கள் இவ்வுலகில் அநேகர். அவர்களின் மத்தியில் இயேசுவைத் தவிர வேறெதுவும் இவ்வுலகில் இல்லாவிட்டாலும், இதுவே மெய்யான பாக்கியம் என்றெண்ணி மகிழ்ந்திருப்பவர் வெகு சிலரே! ஆனாலும் கிறிஸ்தவர்களில் அநேகர் கூட தங்களிடமுள்ள செல்வத்தையும், ஆள்பலத்தையும், அந்தஸ்து, புகழ் இவற்றையே நம்பி வாழ்வதைப் பார்க்கிறோம். ஆகவே “இவை என்னை விட்டு போய்விடுமோ” என்ற பயத்துடனே எப்போதும் வாழ்கின்றனர். ஆதலால் சிறுசிறு தோல்விகளிலும் மனச்சோர்வுக்குள்ளாகத் தள்ளப்பட்டு நிம்மதியை இழக்கின்றனர்.

ஆனால் கர்த்தரை தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது. மலைகள் விலகினாலும், பர்வதங்கள் சாய்ந்து போனாலும் அவர்கள் பயப்படமாட்டார்கள். காரணம், என்ன வந்தாலும் அவர்களின் நம்பிக்கை கிறிஸ்துவே! அவரே அவர்களை இறுதிவரை கரைசேர்ப்பவர், அவர்களுடைய நாளையதினம் அவர் கரத்திலிருக்கிறது. அதை ஆசீர்வாதமாய், அற்புதமாய் நடத்த கர்த்தரிடம் ஆயிரம் திட்டங்களுண்டு.

தேவஜனமே! உங்களது நம்பிக்கை எதின் மேல் உள்ளது? நீங்கள் உலக ஆஸ்தி உடையவராயிருந்தாலும், இல்லாமலிருந்தாலும் கர்த்தரையே நம்புங்கள்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post