கடினப்பட்ட மனசாட்சி


'உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்' - (எபிரெயர் - 3:13).

அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் பல கப்பல்களை கொள்ளை அடிப்பதற்கு காரணமாக இருந்த ஒருவன் தீவிர தேடுதலுக்கு பின் இறுதியில் போலீஸிடம் பிடிபட்டான். போலீஸ் விசாரணைக்குப்பின் நீதி மன்றம் அவனுக்கு நியூயார்க் பட்டணத்தில் மரண தண்டனை கொடுக்கும்படி தீர்ப்பளித்தது. இதன் மத்தியில் விசாரணையின் போது அவனிடம் நூற்றுக்கணக்கானோரை கொல்வதற்கு அவனது மனசாட்சி எப்படி இடம் கொடுத்தது என்று அவனிடம் கேட்ட போது, அவன் கொடுத்த பதில் 'முதல் கொள்ளை அடித்தபோதும், முதல் கொலை செய்தபோதும் என் மனசாட்சி என்னை மிகவும் பயங்கரமாக உறுத்திற்று. ஆனால் நாளடைவில் அதில் பழகி போய் விட்டேன். ஒரே சமயத்தில் 30 அல்லது 40 பேரை சுட்டு கொன்று விட்டு உடனே படுத்து நிம்மதியாக தூங்க கூடிய அளவிற்கு என் மனசாட்சியை மழுங்கடித்து விட்டேன்' என்று பதில் கூறினானாம்.

இம்மனிதனுடைய பதிலை கவனித்தீர்களா? இதில் எவ்வளவு பயமின்மையும் துணிகரமும் கலந்து காணப்படுகிறது! பொதுவாகவே இரட்சிக்கப்படாத மக்களை குறித்து சொல்லும்போது மனசாட்சியை கொலை செய்து விட்டு இஷ்டம் போல் வாழ்கிறவர்கள் என்று கூறுகிறோம். ஆனால் இதே போன்று தவறு என்னிடத்தில் உள்ளதா என்பதை தீவிரமாய ஆராய்ந்து பார்க்க நம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுளளோம். ஒரு காரியத்தை செய்யும்போது அது தவறு என்றும், தேவனுடைய பார்வையில் பாவம் என தெரிந்தும் மீறி செய்யும்போது நம் மனது தீவிரமாய் அடித்து கொள்கிறது. ஆனால் இப்படி பாவம் என்று உணர்த்த கூடிய மனசாட்சியை அலட்சியப்படுத்திவிட்டு, தொடர்நது தவறு செய்யும்போது நாளடைவில் மனசாட்சியானது செத்து விடுகிறது. பின்பு மனம் போல வாழ்க்கையுடன் பாவமும் பெருகுகிறது. பாவம் பூரணமாகும்போது மரணத்தை உண்டாக்குகிறது. இதற்கு நாம் விலகி தப்பும்படியாகவே அன்பின் தேவன் நமக்கு ஆலோசனையை உறுதியாக கூறுகிறார்.

ஒருவேளை நாம் கொள்ளையோ, கொலையோ செய்யாமல் இருக்கலாம், ஆனால் தகாத உறவுகள், பிறருக்கு தெரியாமல் பணத்தை எடுத்து பழகுவது... இப்படிப்பட்ட காரியங்களை செய்தபோது ஆரம்பத்தில் உறுத்தின மனசாட்சி, இப்போது பாவத்தில் மூழ்கி போனதால், செத்து போய்விட்டதோ? மனசாட்சி உறுத்தி கொண்டிருக்கும் வரையில் நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. ஆவியானவர் குற்றம் என்று சொல்வதால் நம் மனசாட்சி உறுத்தி கொண்டிருக்கிறது. அப்போதே நாம் மனம் திரும்பி, பாவ மன்னிப்பு பெற்று விட வேண்டும். ஆனால் மனசாட்சியை மழுங்கடித்தப்பின், கிருபை நம்மை விட்டு எடுபட்டு போகிறது. அப்போது யாரும் மனம் திரும்ப முடியாத நிலைமையை அடைந்து விடுகிறது. அந்த நிலைக்கு வருமுன், தேவன் கிருபையாய் கொடுத்திருக்கிற பாவ மன்னிப்பின் நிச்சயத்திற்குள் வந்து விடுங்கள்.

பரிசுத்த வேதாகமத்தில் இப்படிப்பட்ட பாவத்தோடு வாழ்ந்து முடிவில் மோசமான நிகழ்வை சந்தித்தவர்கள் ஏராளம். இவர்கள் அனைவரும் தங்கள் மனசாட்சியை மழுங்கடித்தவர்கள். இதை வாசிக்கிற நாம் இதிலிருந்து உணர்வடைய வேண்டும். பாவமான காரியங்களிலிருந்து வெளியே வரவேண்டும். இந்த காரியத்திலிருந்து நான் வெளியே வருவேன் என்று உறுதியான முடிவெடுத்து, செயல்படுங்கள். உங்களுக்கு உதவவே ஆவியானவர் காத்திருக்கிறார்.

பாவம் செய்து மனசாட்சியை கொன்று வீணான வாழ்வு வாழ்வதை விட்டுவிட்டு சத்திய தேவனுக்காய் உண்மையாய வாழ பிரயாசம் எடுங்கள். நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். கர்த்தர் உங்களை கழுவி சுத்திகரித்து, மீண்டும் தம்முடைய மகனாக மகளாக மாற்றி, உங்களை வாழ வைப்பார். 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post