பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். - (நீதிமொழிகள் 22:6).

ஒரு அருமையான தகப்பனுக்கு ஒரு அன்புள்ள மகன் இருந்தான். அவனை நல்லவழியிலே தகப்பன் வளர்த்தார். அந்த மகன் பெரியவனாகி, ஒரு நல்ல வேலையில் அமர்ந்தான். அவனுடைய தகப்பனார், உண்மையும நேர்மையுமுள்ளவர். அந்த மகன் நல்லபடியாக தன் வேலையை செய்து கொண்டிருந்தபோது, அவன் கோடிக்கணக்கில் பணத்தை கையாடியது தெரிய வந்தது.

அவன் சிறையிலடைக்கப்பட்டு, அவனது காரியங்கள் நீதிமன்றத்தில் வந்தபோது அவன் எதையும் சட்டைப் பண்ணாதவனாக, விட்டேற்றியாக இருந்தான். கடைசியில் நீதிபதி தன் தீர்ப்பைக் கூறும் தருணம் வந்து, அவன் எழுந்து நிற்கும்போதுதான் கவனித்தான், அவனது தகப்பனாரும் அங்கு எழுந்து நிற்பதை. எப்பொழுதும், தலை நிமிர்ந்து நிற்கும் தன் தகப்பனின் முகம் வாடிப்போய், சோகத்தோடு குனிந்த தலையோடு, தன் மகன் இப்படிபட்டவனாய் மாறுவதற்கு தான்தான் காரணமோ என்று கலங்கியபடி நின்றிருப்பதை கண்ட அவன் இருதயம் உடைந்தது. நேர்மையான தன் தகப்பனுக்கு இப்படி துரோகம் செய்துவிட்டோமே என்று அப்போதுதான் அவன் உணர்ந்து கதற ஆரம்பித்தான்.

நம் பிள்ளைகள் பெரியவர்களாகும்போது, எப்படி இருப்பார்கள் என்பதை நாம் அவர்களுடைய சிறுவயதிலேயே தீர்மானிக்க முடியாது. நல்ல பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளும் வழிதப்பி நடப்பது உண்டு. விசுவாச குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளும் வழி தவறி போவது உண்டு.

ஏன் பிள்ளைகள் தவறுகிறார்கள் என்பதற்கு அநேக காரணங்கள் இருந்தாலும் ஒரு சிலவற்றை காண்போம்.

1. பெற்றோர்களின் தேவபயமற்ற வாழ்க்கை பெற்றோருக்கு பயப்படாத ஒரு சந்ததியை உருவாக்கும். கர்த்தருடைய வழியில் நடந்து அவரை கனப்படுத்த கவனமில்லாத பெற்றோர்களின் பிள்ளைகள் சீர்கெட்டுப் போக பெற்றோரே வழிவகுக்கின்றனர்.

2. சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை ஆடம்பரமான சூழ்நிலைகளில் வளர்க்கும் பெற்றோர்களால் பிள்ளகைள் சீர்கெட்டுப் போகிறார்கள்.

3. பிள்ளைகளின் தேவைகளுக்கு அதிகமாக பாக்கெட் மணி வாரி வழங்கும் பெற்றோர்களால் பிள்ளைகள் ஒழுங்கு தவறிய வாழ்க்கை முறையில் பழகி விடுவார்கள்.

4. பள்ளிக்கூடங்களிலிருந்தும் கல்லூரிகளிலுமிருந்தும் இருந்து வீடு திரும்ப காலதாமதம் ஆகும்போது, அதனுடைய காரணங்களை விசாரிக்காமல் போவதும், பிள்ளைகள் சொல்லும் காரணங்கள் சரிதானா என்று சோதிக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்வதும் பிள்ளைகள் வழி தவறிப் போவதற்கான ஊக்குவிப்புகளாக மாறிவிடும்.

5. பிள்ளைகளுக்கு முன்னிலையில் சண்டையிடும் பெற்றோர்களினாலும், பிள்ளைகளுக்கு முன்னால் உண்மையும் நேர்மையுமான வாழ்க்கையை வாழத் தவறும் பெற்றோர்களாலும், தேவ பயமின்றி வாழும் பெற்றோர்களாலும் பிள்ளைகள் தவறான குணங்களுடையவர்களாக மாறி போகவும் நேரிடும்.

6. பிள்ளைகளின் கல்விக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை கர்த்தருடைய வழியில் வளர்க்க பிரயாசப்படாத பெற்றோர்களால் பிள்ளைகள் சீர்கெட்டு போக வாய்ப்புகள் அதிகம்.

7. டிவி, இன்டர்நெட், மொபைல் போன்கள், நண்பர்கள் விஷயத்தில் கட்டுப்பாடுகளையும் கண்காணிப்புகளையும் வரைமுறைகளையும் விதிக்காமல் விட்டு விடுகிற பெற்றோர்களால் பிள்ளைகள் கட்டுபாடில்லாத வாழ்க்கையால் கறைபடுவார்கள்.

8. பிள்ளைகளை அன்பாக நடத்தாமலும், அன்பாக பேசாமலும், பிள்ளைகளோடு சகஜமாக பழகாமலும் அதிகாரத் தோரணையோடு ஹிட்லர்தனமாக பிள்ளைகளை நடத்தும் பெற்றோர்களால் பிள்ளைகள் வித்தியாசமான முறையில் வழிதவறிப் போக வாய்ப்புகள் உண்டு.

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம் என்று வேதம் நமக்கு கூறுகிறது. அப்படி தேவன் நமக்கு சுதந்தரமாக கொடுத்த பிள்ளைகளை கர்த்தருக்கு பயந்து பெற்றோருக்கு கீழ்ப்படியும் பிள்ளைகளாக வளர்ப்போமாக. கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post