நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.” – சங். 119:71

வயலின் என்னும் இசைக்கருவியை செய்பவர்கள் சிறந்த வயலின் கருவியை உருவாக்குவதற்காக ஒரு மரம் வளருகையில் ஒரு குறிப்பிட்ட பருவத்திலேயே அதை வெட்டி எடுப்பார்கள். பின்னர் அந்த மரம் இழைக்கப்பட்டு, சிறுசிறு பலகைகளாக வெட்டப்படும். இவைகள் சூரிய ஒளியும், குளிர்கால காற்றும் படுகின்ற ஓர் இடத்தில் வைக்கப்படும். பின்னர் வளைக்கப்பட்டு, தேய்க்கப்பட்டு மெருகேற்றப்பட்டு இனிய இசைக்கருவியாக உருவாக்கப்படுகிறது.

இந்த மரத்திற்கு மட்டும் ஒரு நாவு இருந்திருந்தால் என்ன கேட்டிருக்கும்? “நான் பிறந்த மண்ணிலே, என் உறவினர்களோடு நண்பர்களோடு சேர்ந்து வளர்ந்து, கிளைகளை அசைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டிய வயதில் என்னை வெட்டுகிறீர்களே! தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்” என கெஞ்சியிருக்கும். இறுதியில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போயிருக்கும். ஆனால் அது கடந்து வந்த கடின பாதையானது மிகச் சாதாரணமான அதன் பலகைகளை, உலகையே மயக்கும் இசை தரும் மிகச் சிறந்த வயலின் கருவியாக மாற்றிவிட்டது.

இப்படித்தான் வேதத்திலே யோசேப்பு என்னும் வாலிபன் தன் தாய்-தகப்பனோடு தன் தேசத்தில், தன் வீட்டில் சுதந்திரமாக வாழ வேண்டியவன் வெளிநாட்டிற்கு அடிமையாக விற்கப்படுகிறான். அங்கும் துன்பத்திற்கு மேல் துன்பம், வீண்பழி, சிறைவாசம் என வருடங்கள் பல உருண்டோடின. துன்பத்தின் பாதையில் யோசேப்போ பொறுமையாயிருந்தான். தேவனின் கரத்தில் தன்னை முற்றும் ஒப்படைத்தான். முடிவு, நாட்டிற்கே நறுமணமானான்.

பிரியமானவர்களே! மழைக்குப் பின் அழகிய வானவில் தோன்றுவதில்லையா? அதுபோல இன்றைய துக்கங்கள் விரைவில் சமாதானத்தைக் கொண்டுவரும். அன்பரே, “வாழவேண்டிய வாலிப வயதில் துன்பத்தால் சூழ்ந்துள்ளேன். எப்போதும் நெஞ்சை அடைக்கும் அனுபவங்கள், கண்ணீரே எனக்கு உணவாயிற்று.” என்று சோர்ந்துபோய் உள்ளவரா நீங்கள்? துன்பத்தில் துவண்டு விடாதீர்கள். எந்த ஒரு தகப்பனும் தனது பிள்ளைகளில், எந்த பிள்ளையால் அதிக பாரத்தை சுமக்க முடியுமோ அவனிடமே கனமான பையைக் கொடுப்பார். அந்த மகன் தகப்பனின் நம்பிக்கைக்குப் பாத்திரவானாய்த்தான் இருக்கவேண்டும். அதுபோல நம் பரம தகப்பனின் நம்பிக்கைக்கு பாத்திரவான் உங்கள் குடும்பத்தில் நீங்களே! நீங்கள் சுமக்கும் பாரத்திற்கு ஏற்ற சன்மானம் ஏற்ற நேரத்தில் கொடுக்கப்படும். அதுவரை... பொறுமையோடிருங்கள்.
- கர்த்தர் உங்களோடிருப்பாராக !

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post