உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும், உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்

நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும், உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்...” – யோவேல் 2:12 

1877ம் ஆண்டு அமெரிக்காவில் கோதுமை செழித்து வளர்ந்து நின்ற நாட்களில் திடீரென்று வெட்டுக்கிளிகள் எழும்ப ஆரம்பித்தன. கோதுமை கதிர்களையெல்லாம் வெட்டித் தீர்க்கத் தொடங்கின. மின்கோட்டா ஆளுநர் மறுநாள் மாநிலத்திலுள்ள அனைத்து மக்களும் உபவாசித்து ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டார். அனைவரும் ஜெபித்தனர். மறுநாள் தொடங்கி நான்கு நாட்கள் கடும்வெயில் அடித்தது. அடித்த வெயிலில் வெட்டுக்கிளிகளின் முட்டைகள் அனைத்தும் பொரிந்து வெளியே வந்து இன்னும் பெருகியது. நமது உபவாசம் பலன் அளிக்கவில்லையே என எல்லோரும் துக்கப்பட்டார்கள். மறுநாள் காலை வெட்டுக்கிளிகள் படைதிரண்டு பயிரை அளிக்கும்படி புறப்படும்நேரம் உபவாச ஜெபத்திற்கு பதில் வந்தது. ஒரு கடும் மூடுபனி வந்து நிலத்தை மூடிற்று. அத்தனை வெட்டுக்கிளிகளும் செத்து மடிந்தன. கோதுமையின் தங்க நிறக்கதிர்கள் தலை அசைத்து ஆண்டவரை மகிமைப்படுத்தின. இது வரலாற்றுப்புத்தகம் கூறும் உண்மை நிகழ்ச்சி.

தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர். ஆனால் உபவாசித்து ஜெபிக்கும்போது கிடைக்கும் பதில் விசேஷமானதே. நெருக்கி நிற்கிற பிரச்சனை நேரத்தில் உபவாசித்து ஜெபித்து வெற்றி கண்ட ஜெபவீரர்களை வேதம் குறிப்பிட மறக்கவில்லை. தேவமனிதர்களான மோசே, தாவீது, எலியா, எஸ்றா, நெகேமியா, எஸ்தர், தானியேல் போன்றோரின் பெரிய பட்டியல் வேதத்தில் உள்ளது. பாவம் பெருகினதால் கர்த்தர் நினிவேயை அழிக்கச் சித்தம் கொண்டார். மனமுடைந்த நினிவேயின் மக்கள் உபவாசித்து ஜெபித்தார்கள். இராஜாவிலிருந்து ஆடு, மாடு வரைக்கும் எல்லோரும் உபவாசித்தனர். கர்த்தர் நினிவேக்கு மனமிறங்கினார். மக்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

சிலர் எண்ணுவர் ஜெபித்தால் போதாதா, உபவாசமிருந்து ஜெபிக்க வேண்டுமா? என்று. தேவக்குமாரனாம் இயேசுவே 40 நாட்கள் உபவாசமிருந்தார். அப்படியென்றால் பாவத்தில் உருவான நாம் உபவாசித்து ஜெபிப்பது எத்தனை அவசியமானது? நீங்கள் சந்திக்கும் பிரச்சனை மிகப்பெரிதோ? குடும்பத்தில் சமாதானமற்ற நிலையோ? பிள்ளைகளின் திருமண காரியத்தில் தடையோ? எதுவானாலும் உபவாசித்து ஜெபியுங்கள். ஜெயம் எடுங்கள்.
- விசுவாசியுங்கள்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post