நம்முடைய ஆண்டவர் பெரியவரா? சிறியவரா?

உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான்… நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.” - ஏசாயா 57:15

உலகப்பிரசித்திப் பெற்ற தேவ ஊழியர் D.L.மூடி அவர்கள் ஒருமுறை ஓய்வுநாள் பாடசாலை ஒன்றுக்கு சென்று அங்குள்ள பிள்ளைகளை உற்சாகப்படுத்தினார். பின் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். நம்முடைய ஆண்டவர் பெரியவரா? சிறியவரா? உடனே அங்கு கூடியிருந்த சிறுபிள்ளைகள் எல்லோரும் ஒருமித்த குரலில் பெரியவர் என்று சத்தமிட்டுச் சொன்னார்கள். D.L.மூடிக்கு அதிக சந்தோஷம். ஆனால் முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு குட்டிப்பிள்ளை எந்த பதிலும் பேசாமல் எதையோ சிந்தித்துக்கொண்டிருந்தது. அவர் அவளிடம், “நீ ஏன் பதில் எதுவும் கூறாமல் அமைதியாயிருக்கிறாய்?”என்றார். அக்குழந்தை பணிவாக எழுந்து நின்று, “மிகப்பெரியவரும் இயேசுதான்; மிகச்சிறியவரும் இயேசுதான். உலகத்தையே படைத்த இயேசப்பா மிகப் பெரியவர்தான். ஆனால் என்னுடைய மிகச்சிறிய இதயத்திற்குள் வந்திருப்பதால் அவர் சிறியவரும்தானே!” என்றாள். இதைக் கேட்ட மூடி திகைத்துவிட்டார். “இதுவரை இந்த உண்மையை நான் உணராமல் இருந்துவிட்டேனே” என எண்ணினார்.

ஆம், நம் ஆண்டவர் மிகவும் பெரியவர். அதே வேளையில் மனிதர்களாகிய நம்முடன் வாசம் பண்ணும்படி தன்னைத் தாழ்த்தி மனுஉரு எடுத்து இவ்வுலகத்திற்கு வந்தவர். அவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் யூதா கோத்திர சிங்கம்; அதே வேளையில் மாட்டுத்தொழுவில் பிறந்த தேவமைந்தன். அவர் ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசமாயிருப்பவர்தான், அதே வேளையில் ஏழை மார்த்தாள் மரியாள் வீட்டிலும் உணவருந்துபவர். அவர் மனிதனை மண்ணினால் படைத்தவர்தான்; அதேவேளையில் தன்னால் படைக்கப்பட்ட பிலாத்துவின் முன்பாக கூட பொறுமையோடு நின்றவர். அவர் கேருபீன்கள், சேராபீன்கள் போற்றும் பரிசுத்தர்தான்; அதே வேளையில் பாவிகளின் சிநேகிதர். அவர் பட்சிக்கிற அக்கினிதான்; அதேவேளையில் லாசருவின் மரணத்தில் கண்ணீர் விடுபவர்.

பிரியமானவர்களே! நம் தேவன் அகில உலகம் கொள்ளாத உன்னததேவன்; அவர் சின்னஞ்சிறு உள்ளத்திலும் வாசம் செய்யும் பாசமுள்ள தேவன். இப்படி நம் தேவனைக் குறித்த ஒரு தெளிவான அறிவு நமக்கிருக்கும்போது அவரது பரிசுத்தத்தைக் கண்டு நாம் நடுங்குகிறவர்களாகவும், அதே வேளையில் கிருபையைப் பற்றிக்கொண்டு கிருபாசனத்தண்டை தைரியமாய் நெருங்கி கிட்டிச் சேருகிறவர்களாகவும் காணப்படுவோம். ஆம், இத்தனை மகத்துவமுள்ள தேவனை தெய்வமாக கொண்ட நாம் பாக்கியவான்களல்லவா?

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post