தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார்

இனி தப்பிப் பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று.பவுல் அவர்கள் நடுவிலே நின்று.ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.(என்றான்)” – அப்.27:20-22

குளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அதில் மூழ்கி விட்டான். அனைவரும் பதற்றத்தோடு அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே நீச்சல் தெரியும். ஆனால் அவரோ அமைதியாக இருந்தார். தண்ணீரில் மூழ்கினவன் ஒரு தடவை, இரண்டு தடவை மூழ்கி, மூச்சுத் திணறி மூன்றாம் முறையாக மூழ்க ஆரம்பித்தான். அப்பொழுது நீச்சல் தெரிந்த அவர் குளத்திற்குள் பாய்ந்து சென்று நீரில் மூழ்கினவரைத் தூக்கிக்கொண்டு வந்து சேர்ந்தார். ஏன் அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்துவிட்டு மூன்றாம் முறை மூழ்க ஆரம்பித்தவுடன் பாய்ந்து சென்று காப்பாற்றினார்? பதிலை நீங்களே யூகித்திருப்பீர்கள்... தண்ணீரில் மூழ்கியவனை உடனே நாம் காப்பாற்ற முயற்சித்தால் காப்பாற்றுபவனை மூழ்குகிறவன் இறுகப்பிடித்து இழுத்து இருவரும் மூழ்க நேரிடும். மூழ்கினவன் தன் சொந்த பெலனை எல்லாம் இழந்தால்தான் அவனை காப்பாற்றுவது எளிது. இதுபோலத்தான் நமது சில தேவையிலும் தேவன் உதவி செய்ய கடைசி மணித்துளிவரை பொறுத்திருப்பதுண்டு.

வேதத்திலே, நாம் பார்ப்போமென்றால் சாறிபாத் விதவையின் வாழ்விலும் கடைசி வேளையில் இதே அற்புதம் நிகழ்ந்தது. கடும் பஞ்சகாலத்தில் அவளிடமிருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து விட்டன. கடைசியாக பானையை வழித்தெடுத்தால் ஒரு படி மாவும் ஒரு கரண்டி எண்ணையுமே தேறும். அதில் கடைசி அடை செய்து சாப்பிட்டு விட்டு உயிரைவிட எண்ணினாள். அந்த கடைசி கட்டத்தில் ஆண்டவர் எலியாவை அவளிடத்தில் அனுப்புகிறார். சில வேளையில் நம்முடைய வாழ்விலும் நமது தேவை உச்சக்கட்டத்தை அடையும்போதுதான் தேவன் நமது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். காரணம் என்ன? நமது சொந்த முயற்சிகளினால் பல இடங்களுக்கு உதவி நாடி சென்று, பலரை சந்தித்து, பல கதவுகளைத் தட்டி, எங்கும் உதவிக்கான வாசல் அடைபடும்போது இறுதியில் ஆண்டவரிடத்தில் வந்து ஆண்டவரே! நீரே என் தஞ்சம். வேறு கதி இல்லை என்று நாம் சொல்லும் நிலைக்கு வரும்வரை தேவன் நமது வாழ்வில் குறுக்கிடமாட்டார். நாம் அவரிடம் சரணடைந்து அவர் பாதத்திற்கு வரும்வரை அவர் அமர்ந்திருப்பார்.

பிரியமானவர்களே! வாழ்வின் கடைசி மணித்துளியில் வந்து நிற்கிறீர்களோ? மனிதர்களை நம்பி ஏமாந்து போனீர்களோ? பிரச்சனைகளுக்கு முடிவு மரணம்தான் என எண்ணி சோர்ந்து போயுள்ளீர்களோ? தேவனின் பாதத்தில் சரணடையுங்கள் 100% அவரே கதி என்று அவர் பாதத்தில் விழுந்து விடுங்கள். கட்டாயம் கர்த்தர் அற்புதம் செய்வார். விசுவாசத்தோடு அவருடைய வேளைக்காக காத்திருங்கள்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post