கல்வாரி அன்பு

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். - (கலாத்தியர் 2:20).

நாம் அனைவரும் கிறிஸ்து நமக்காக, நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்றும், நமக்கு இரட்சிப்பை இலவசமாக தம்முடைய இரத்தத்தை சிந்தி சம்பாதித்து கொடுத்திருக்கிறார் என்றும் விசவாசிக்கிறோம். கிறிஸ்துவை ஏற்றுகொண்டிருந்தால், அவருடைய அன்பும் நமக்குள் இருக்க வேண்டும். கீழே காணப்படும் காரியங்கள் ஒவ்வொன்றையும் நாம் வாசித்து, நமக்குள் அந்த காரியங்கள் காணப்படுகிறதா என்று நம்மையே ஆராய்ந்து பார்ப்போமா?

அன்பற்ற வார்த்தையை பேசிவிட்டு, அன்பற்ற சிந்தை கொண்டுவிட்டு, அதைக்குறித்து சிறிதுகூட எனக்கு மனத்துயரம் இல்லாதிருந்தால், நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

பிறருக்கு ஊறு விளைவிக்கும் ஜோக்குகளில் நான் இன்பம் கொண்டால், சாதாரண சம்பாஷணைகளில் பிறரை எளிதில் மட்டம் தட்டவோ அல்லது என் சிந்தையில் கூட பிறரை இளப்பமாய் எண்ணினாலோ நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

சிலருடைய நட்பை இழந்து விடக்கூடாது என்பதற்காவோ அல்லது அன்புள்ளவன் என்ற என் நற்பெயரை இழந்து விடகூடாது என்பதற்காகவோ நான் உண்மையை மனதார பேசுவதற்கு நான் அஞ்சுவேன் என்றால் நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

எனக்கு நானே இங்கிதமாய் நடந்து கொண்டு, சுய அனுதாபம் என்னும் கொடிய துர்க்குணத்தில் சவுகரியமாய் வீழ்ந்து கொண்டு என்னை குறித்தே எப்போதும் கவலையில் முழ்கியிருந்தால் எல்லாவற்றையும் தேவ கிருபையின் உதவியோடு தைரியமாய் தாங்கி சகித்து கொள்ள முடியவில்லை என்றால் நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

மனபூர்வமான மகிழ்ச்சியோடு இரண்டாவது ஸ்தானத்தை என்னால் எடுக்க முடியவில்லை என்றாலோ, அல்லது ஒருவேளை முதலாவது ஸ்தானத்திற்கு வரவேண்டியிருக்கும்போது, 'நான் தகுதியே இல்லாதவன்' என பாசாங்காய் சொல்வேனானால் நான் கல்லவரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

தித்திப்பான தண்ணீர் நிறைந்த ஒரு டம்ளரை எவ்வளவு மோசமாய் அசைத்தாலும் அதிலிருந்து சிந்தும் தண்ணீரில் ஒரு துளி கூட கசப்பாய் மாறுவதில்லை. அவ்வாறிருக்க என்னை திடீரென்று குலுங்க செய்யும் சந்தர்ப்பம் என்னை பொறுமையற்ற அன்பில்லாத வார்த்தைகளை பேச செய்தால் நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

என்னை யாரோ அநீதியாய் குற்றம் சாட்டி விடுகிறார்கள். அவ்வேளையில் என்னை நான் அறிந்திருக்கிறது போல அவர்கள் எனனை அறிந்திருந்தார்களானால் இப்போது சாற்றிய குற்றத்தை விட அதிகமாய் என்னை குற்றம் சாட்ட முடியும் என்ற உண்மையை மறந்து அவர்களிடம் கசப்பு கொள்வேன் என்றால், நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

எனக்கென்று விசேஷித்த நண்பர்களை இணைத்து கொண்டு அதனிமித்தம் என்னோடுள்ள மற்றவர்கள், 'தாங்கள் விரும்பப்படாதவர்கள்' என எண்ணும் நிலையை நான் உருவாக்கியிருந்தால், இவ்வாறு என்னுடைய சிநேகம் பரந்த மனதுடையதாய் இராமல் எல்லாரையும் உண்மை ஐக்கியத்திற்குள் இணைத்து கட்டுவதாய் இல்லாதிருந்தால், நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

பிறரால் முரட்டுதனமாக நடத்தப்படுதல், தனிமைப்படுத்தப்படுதல், விரும்பாத சூழ்நிலையில் வைக்கப்படுதல் போன்ற கடுமையான துன்புறுத்தலுக்கு நான் உள்ளாக வேண்டியது தேவனுடைய ஊழியத்திற்கு அல்லது தேவன் என்னை வனைய தேவையாய் இருக்கும்போது, நானோ அதை தவிர்க்க முயற்சித்தால் நான் கல்வாரி அன்பை ஒன்றுமே அறியாதிருக்கிறேன்.

உங்களிடம் கல்வாரி அன்பு உண்டா?

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post