உங்கள் நண்பன் யார்?

“சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.” - நீதி.18:24

“உன் நண்பன் யாரென்று சொல்; நீ யாரென்று நான் சொல்கிறேன்” என்ற ஒரு வழக்குமொழி ஒன்று உண்டு. நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்திலும் கூட நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது  மிக முக்கியமாகும். வேதத்திலே இரு வாலிபர்கள் தெரிந்தெடுத்த நண்பர்கள் மூலம் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனையைக் காண்போம்.

அம்னோனின் நண்பன் யோனதாப் (2சாமு. 13:1-5): தாவீது ராஜாவின் மகன் அம்னோன். இவனுக்கு மகா தந்திரவாதியான யோனதாப் என்ற நண்பன் இருந்தான். அம்னோனின் உள்ளத்தில் தோன்றிய பாவத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் இலவசமாகவே எழுதிக்கொடுத்து  மோசமான படுகுழிக்குள் தள்ளி விட்டான் யோனதாப். இது மாத்திரமல்ல அம்னோனின் பாவச்செயலுக்கு தூண்டுதலாயிருந்த இவனே அம்னோனின் மரணச்செய்தியை தாவீது இராஜாவுக்கு தெரியப்படுத்துகிறான். எந்த ஐக்கியம் நம்முடைய பாவ சந்தோஷத்திற்கு காரணமாயிருக்கிறதோ அதுவே நம்முடைய வாழ்க்கையின் முடிவுரையை எழுதவும் வாய்ப்புகள் உண்டு. அம்னோன் எங்கே மடங்கி விழுந்தானோ, அங்கே மடிந்தும் கிடந்தான். ஆளப்பிறந்த ராஜாவீட்டு பிள்ளையின் வரலாற்றை ஒரே அதிகாரத்திற்குள் சுருக்கி விட்ட யோனதாபின் தோழமை எவ்வளவு மோசமானது!

தாவீதின் நண்பன் யோனத்தான்: தாவீதை கொலைவெறியோடு பகைத்தார் யோனத்தானின் அப்பா சவுல். காரணம் ராஜ்யபாரம் தாவீதின் கைக்கு போய்விடுமோ என்ற பயம். ஆனால் யோனத்தானோ அரசியலில் தாவீதுதான் தனக்கு போட்டி என அறிந்தும் அவனை உயிரைப்போல நேசித்தான். சட்டப்படி சிங்காசனம் தனக்குரியது என்றாலும், தாவீதின் மேலிருந்த தேவதிட்டத்தையும், அபிஷேகத்தையும் உணர்ந்தவனாய் தாவீதின் உயிரை பலமுறை காப்பாற்றி, Friendshipன் உச்சத்திற்கு சென்றான் யோனத்தான். உங்கள் நண்பன் யார்? 

தாவீதின் மகனை மடங்கடித்த யோனதாப்பா? 
 தாவீதின் உயிரைக்காத்த யோனத்தானா?

வாலிபரே! இன்னொரு நண்பனின் சகவாசத்திலும் நீங்கள் கவனமாயிருக்கவேண்டும். அது யார் தெரியுமா? நண்பனை விட அதிக நேரம் உங்களை மகிழ்வித்து உங்களின் ஆசைக்கேற்ப விபரங்களை அள்ளித்தந்து உங்களை சந்தோஷப்படுத்துவது உங்களது Smart Phone. அநேகர் வலைதளம் என்ற வலையில் சிக்கியுள்ளார்கள். இணையதளத்தில் நாம் தேடும், பார்க்கும், கேட்கும் காரியங்கள் ஆண்டவரை துக்கப்படுத்துகிறதா என்பதில் கவனமாயிருங்கள். நம்முடைய முடிவு தெலீலாளோடு சிநேகமாயிருந்த சிம்சோனைப் போல இராமல், கர்த்தரோடு ஐக்கியமாயிருந்த யோசேப்பின் வாழ்வைப் போல் மகிமையாய் இருக்க கவனமாயிருப்போம். தோழமையில் தூய்மை காப்போம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post