ஏற்றகாலத்திலே உயர்த்தும் தேவன்

ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.” – 1பேதுரு 5:6

“அடங்கியிரு” என்ற வார்த்தையைக் கேட்டாலே வாலிபர்களுக்கு அலர்ஜிதான். இக்காலத்தில் பெற்றோர், ஆசிரியர், பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்பது என்பதே மிகவும் கடினமான ஒரு காரியமாகிவிட்டது. இதில் வேறு தேவனுடைய கைக்குள் அடங்கியிருப்பதைப் பற்றி யோசிக்க அவர்களுக்கு நேரமேயில்லை. மனம் விரும்பியதை விரும்பிய நேரத்தில் பெற்றுக்கொள்ள யாரும் தடையாயிருப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஆலோசனைகள் அடக்குமுறையாக தோன்றுகிறது. வேதம் காட்டும் பாதை “இக்காலத்திற்கு ஏற்றதல்ல” என்று ஒதுக்கி விடுகின்றனர்.

ஆனால் தேவகரத்திற்குள்  பொறுமையுடன் அடங்கியிருந்தவர்கள் ஏற்றகாலத்தில் உயர்த்தப்பட்டனர் என்பதை வேதத்தில் அநேக சாட்சிகள் மூலம் அறிந்துகொள்ளலாம். யோசேப்பு என்னும் வாலிபன் தேவனுக்கோ, தகப்பனுக்கோ, அடங்கிப்போகாமல்  இருந்திருந்தால், நிச்சயம் அத்தனை பெரிய உயர்வுக்கு பாத்திரவானாக இருந்திருக்கமுடியாது. தன்னை முழுவதும் தேவகரத்திற்குள்  ஒப்புக்கொடுத்துவிட்டு அனைத்தையும் சகித்துக்கொண்டு, பாவத்திற்கு விலகி ஓடினார். தேவன் ஆயத்தப்படுத்தின உயர்வுக்கு தகுதியாக மாறிவிட்டார்.

ஆம், தேவன் யோசேப்பை உயர்த்துமுன் அவருக்கு எத்தனை டெஸ்ட் வைத்திருக்கிறார் பாருங்கள். தகப்பனுக்கு கீழ்ப்படிகிறானா என்று பார்த்தார். சகோதரர்களின் பாவத்திற்கு உடன்படுகிறானா அல்லது சேற்றில் மலர்ந்த தாமரையாய் தனித்துவமாய் இருக்கிறானா என கவனித்தார். எகிப்திற்கு விற்கப்பட்டு அந்நிய நாட்டிலும் எனக்கு சாட்சியாய் வாழ்கிறானா? வேலையில் உண்மையாயிருக்கிறானா என்று உற்று நோக்கினார். பாவத்தைக் குறித்து அவனது மனநிலை எப்படி என்று போத்திபாரின் மனைவியை வைத்து சோதித்து பார்த்தார். சிறையில் அவனது பொறுமையைப் பார்த்தார். இத்தனை டெஸ்ட் வைத்து அதிலெல்லாம் வெற்றி பெற்று இன்னும் தனது கரத்திற்குள்ளே அடங்கியிருந்த யோசேப்பை தேவன் தேசத்திற்கே ஆசீர்வாதமாய் உயர்த்தினார்.

வாலிபனே! குறுகியகாலத்திற்குள் வெற்றி சிறக்க, உயர்ந்திருக்க வழிகளை புத்தகங்களிலும், சமூகவலைத் தளங்களிலும் தேடிக்கொண்டேயிருக்கும் நமக்கு, தேவன் இத்தனை டெஸ்ட்களையும் வைத்தால் ஏதாவது ஒன்றிரண்டிலாவது பாஸ் பண்ணி விடுவோமா என சிந்திப்போம். தேவன் நம்மை உயர்த்தினால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் அவர் கரத்திற்குள் அடங்கியிருக்கும் நாளில்தான் கற்றுக்கொள்ள முடியும். அடங்கியிராமல் கிடைக்கும் உயர்வு வீழ்ச்சியில் முடியலாம். ஆனால் அடங்கியிருந்து பெற்றுக்கொள்ளும் உயர்வினால் உலகமே உங்கள் பக்கம் திரும்பும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.விசுவாசியுங்கள்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post