விந்தையாக இருக்கிறதல்லவா?

உங்கள் மனம் புதிதாகிறதினாலே  மறுரூபமாகுங்கள்.” – ரோமர் 12:2

1) ஆலயத்திற்கு சென்று 50 ரூபாயை காணிக்கைப்பெட்டியில் போடும்போது நமக்கு அந்த பணம் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் ஷாப்பிங் போகும்போது அதே தொகை மிகவும் அற்பமாகத் தெரிகிறதே? இது விந்தையாக இருக்கிறதல்லவா?

2) ஆலயத்திற்கு சென்று இரண்டரை மணிநேரம் ஆராதனையில் உட்காரும்போது அது மிக நீண்ட நேரமாக நமக்குத் தெரிகிறது. ஆனால் மணிக்கணக்கில் டி.வி. பார்க்கும்போதோ சினிமா பார்க்கும்போதோ அதே நேரம் மிகக் குறைவாகத் தெரிகிறதே! இது விந்தையாக இருக்கிறதல்லவா?

3) பரிசுத்த வேதாகமத்தின் ஒரு அதிகாரத்தைப் படிப்பதற்குள் போரடித்து விடுவதைப் போலிருக்கிறது. ஆனால் படிப்பு சம்பந்தப்பட்ட புத்தகங்கள், நாவல்கள், கதைப் புத்தகங்களில் நூற்றுக்கணக்கான பக்கங்களை படிக்கும்போது போரடிக்காமல் இருக்கிறதே! இது நமக்கு விந்தையாக இருக்கிறதல்லவா?

4) சபைகளில் ஒரு விசேஷ கூட்டம் பற்றிய அறிவிப்பை இரண்டு வாரங்களுக்கு முன்பே கேள்விப்படுகிற நாம், கடைசி நேரத்தில் நமக்குத் தெரியவந்த உலக நிகழ்ச்சிக்காக அந்த விசேஷக் கூட்டத்தைத் தவிர்த்து விடுகிறோமே இது நமக்கு விந்தையாக இருக்கிறதல்லவா?

5) ஒவ்வொரு நாளும் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளை அப்படியே நம்புகிற நாம், பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டவைகளுக்கு மட்டும் சந்தேகத்தோடு கேள்வி எழுப்புவது விந்தையாக இருக்கிறதல்லவா?

6) பரலோகத்தில் ஒரு இடத்தை எப்படியாவது பெற்றுக்கொள்ள ஒவ்வொவரும் விரும்புகிறோம். ஆனால் மரிக்க விரும்புவதில்லையே! இதுவும் நமக்கு விந்தையாக இருக்கிறதல்லவா?

ஆம், பிரியமானவர்களே! மேற்கண்ட அனைத்திற்கும் காரணம், தேவனை முழு இருதயத்தோடும், முழு பெலத்தோடும் அன்புகூராததே ஆகும். மாறாக அவரை உண்மையாய் நேசித்து, வேதம் வாசித்து, ஜெபிக்க எவ்வளவு நேரம் கிடைத்தாலும் இன்னும் கொஞ்ச நேரம் கிடைத்தால் நன்றாயிருக்குமே  என்றுதான் தோன்றும். நாம் தேவன் மேல் வைக்கும் அன்பின் வெளிப்பாடு நம்மையும் அறியாமல் இப்படித்தான் வெளிப்படும்.

உங்கள் செயல்கள் தேவன் மேல் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறதா?

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post