நித்தியத்தில் நினைகூரப்படுபவை எவை?
எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்”. – பிலி.3:7
“நித்தியத்தில் நினைகூரப்படுபவை எவை?” என்ற தலைப்பில் எழுதிய செய்தியில், சகோ.வில்லியம் பூத் (இரட்சண்ய சேனை சபையின் தலைவர்) தான் கண்ட ஒரு கனவைப் பற்றி எழுதியிருக்கிறார். அதில் தன்னை ஒரு சாதாரண விசுவாசியாகவே கண்டார். அக்கனவில் அவர் மரித்து பரலோகத்திற்குள் நுழைந்தார். அங்கே தன்னுடைய ஜீவபுஸ்தகத்தைக் கண்டார். அதில், “மன்னிக்கப்பட்டான்” என்ற வார்த்தை மாத்திரமே பெரிதாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டார். தான் மன்னிக்கப்பட்டு இப்போது பரலோகத்தில் இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்தார்.
ஆனால் பரலோகத்தில் வேறொரு விசுவாசிகளின் கூட்டத்தையும் கண்டார். அவர்களோ சொல்லிமுடியாத விசேஷித்த மகிமை கொண்டவர்களாய் இருந்தார்கள். அதைப் பார்த்த பூத் அவர்கள் மீது பொறாமை கொண்டார். அச்சமயத்தில் இயேசு, “நீ இந்த ஜனங்களோடு ஒன்றாய் சேர்ந்துகொள்ள ஒருக்காலும் முடியாது. இவர்கள் இந்த பூமியில் தங்கள் சொந்த ஜீவனை அருமையாய் எண்ணாதவர்கள். எனக்காகவும், என் சபைக்காகவும் சகலத்தையும் இழந்திருக்கிறார்கள். பணத்தை, பதவியை, கெளரவத்தை.... இன்னும் அதிக மதிப்புடையதாய் கருதும் யாவற்றையும் இவர்கள் இழந்து தியாகம் செய்தார்கள். நீயோ இந்த பூமியில் உனக்காகவே ஒரு வாழ்க்கை வாழ்ந்தாய்” என மனம் வருந்தி கூறினார். இயேசு இவ்வாறு கூறவும் அவர் கனவிலிருந்து விழித்தெழவும் சரியாய் இருந்தது. தான் இன்னமும் உயிரோடிருப்பதையும் தான் கண்டது கனவு மாத்திரமே என்பதையும் அறிந்து அன்றே ஒரு உறுதியான தீர்மானமெடுத்தார். “எனது எஞ்சியுள்ள வாழ்வை ஆண்டவருக்காகவே வாழ்ந்து முடிப்பேன்” என்று.
ஆம், விசுவாசிகளாகிய நாம், நம்முடைய இலாபத்தை கருத்தில் கொண்டு, நமக்காகவே ஒரு வாழ்க்கை வாழலாம்; அல்லது நமக்கு இலாபமானவற்றையெல்லாம் தேவனுக்கென்று இழந்து, பவுலைப் போலவும் வாழலாம். அதாவது இப்பூமியில் எவைகளுக்கெல்லாம் அதிக மதிப்பைக் கொடுக்கிறோமோ, அவைகளுக்கு பரலோகத்தில் எவ்வித மதிப்புமிருக்காது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். கிறிஸ்துவுக்காகவும் அவரது பணிக்காகவும் தனக்குள்ளதை இழந்தவர்களே மகிமையான கூட்டத்தில் காணப்படுவர்.கர்த்தர் உங்களோடிருப்பாராக !
ஆமென்.
Post a Comment