ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்துக்கு நீங்கும் வழிகளுண்டு


ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்துக்கு நீங்கும் வழிகளுண்டு.

தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும்  கர்த்தர் நல்லவர்.” –புலம்பல் 3:25

டான் மில்லர் என்ற மெதடிஸ்ட் சபை போதகர் இருந்தார். நன்றாக பாடுவதிலும், பிரசங்கிப்பதிலும் கிருபை பெற்றவராயிருந்தார். ஒருமுறை அவர் கடும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, மிகவும் அவதியுற்றார். குறிப்பாக தொண்டை பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, அதைப் பரிசோதித்துப் பார்த்தபோது குரல் வளையில் உள்ள நரம்புகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. நுண்கிருமிகள் மில்லருடைய தொண்டையில் அரிப்பை ஏற்படுத்தி கெட்டுப்போக செய்திருந்தன. தற்போது மில்லர் அவர்களால் பாடவோ, பிரசங்கம் பண்ணவோ முடியாதபடிக்கு அவருடைய சத்தம் மிகவும் குன்றிப்போய் இருந்தது. ஆகவே சபை நிர்வாகத்தினர் அவரை சபையில் இருந்து அலுவலகப் பணிக்கு மாற்றினர். ஆனாலும் மில்லரால் அலுவலகப் பணியையும் செய்ய முடியாத அளவுக்கு பெலவீனமாகவே காணப்பட்டார். இறுதியில் மருத்துவர்கள் பரிசோதித்து இனி இவர் உயிர் பிழைக்க சாத்தியமில்லை என்று கூறி மில்லரை வீட்டிற்கே அனுப்பி வைத்தனர். அவருக்குண்டான மருத்துவக்காப்பீட்டுத் தொகை, இயலாதோருக்கான உதவித்தொகையும் நிறுத்தப்பட்டது. தனக்கு நேரிட்ட எல்லாவற்றிலும் மில்லர் தேவனிடம் ஜெபிப்பதை நிறுத்தவில்லை.

இதன் மத்தியில் வேறொரு சபையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. ஓய்வுநாள் பாடசாலை ஆசிரியராக வந்து உதவி செய்யுங்கள். உங்களுக்கு சிறிய மைக்ரோ போன் தருகிறோம். அதில் பேசுங்கள் என்றார்கள். ஜெபத்தோடு அப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட மில்லர் 200 சிறுபிள்ளைகள் அடங்கிய அக்கூட்டத்தில் சங். 103ல் இருந்து பேசினார். 103:3ல் அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து உன் நோய்களையெல்லாம் குணமாக்கி என்ற வசனத்தை சொல்லிக் கொண்டிருக்கும்போதே மில்லருடைய தொண்டையில் மாற்றங்கள் ஏற்பட்டன. பழைய தொனியில் கெம்பீர சத்தத்தோடு பேசினார். சரீரம் பெலனடைந்தது. இதைக் கண்ட சபையாரும் மில்லரும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தனர். அவர் தமது வசனத்தை அனுப்பி மில்லரை குணமாக்கினார். அல்லேலூயா!

மேலே வாசித்த சம்பவத்தைப் போன்று மரணத்துக்கேதுவான சூழ்நிலை, அதாவது வாழ்க்கையின் அஸ்தமனத்தை நோக்கிச் செல்வது போல் காணப்படுகிறீர்களா? தைரியமாயிருங்கள். ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்துக்கு நீங்கும் வழிகளுண்டு. (சங்.68:20) தொடர்ந்து விசுவாசத்தோடு ஜெபியுங்கள். தம்மைத் தேடுகிறவர்களுக்கு கர்த்தர் நல்லவர். இன்று உங்களுக்கு ஒரு அற்புதத்தை நிச்சயமாய் செய்வார். ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post