நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார், தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர், என் தேவனே, தாமதியாதேயும்.- சங்கீதம் 40:17
தாவீது மிகவும் நெருக்கப்பட்ட சூழ்நிலையில் கர்த்தரோ என் மேல் நினைவாயிருக்கிறார் என்று சொல்லுகிறார். சங்கீதம் 40ம் அதிகாரம் முழுவதையும் வாசித்துப்பருங்கள். தாவீத தன்னுடைய வாழ்க்கையில் எவ்விதமான நெருக்கங்களையெல்லாம் கடந்து சென்றார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். தாவீதின் எல்லா நெருக்கத்தின் மத்தியிலும் தன்மேல் தேவன் நினைவாக இருக்கிறார் என்பதை உணர்ந்தான். நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது.(சங் 136:23) நீங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் காணப்படும் போது உங்களை நினைக்கிறவர்கள் அநேகர் உண்டு. ஆனால் நீங்கள் சிறுமைபடுத்தப்படும் போது, தாழ்வில் காணப்படும் போது உங்களை விசாரிக்கிறவர் கர்த்தர் ஒருவரே. உங்கள் மேல் தேவன் நினைவாய் இருக்கிறார். உங்கள் பிரச்சனைகளும், போராட்டங்களும், நீங்கள் இப்பொழுது கடந்து போகும் வேதனையின் பாதைகளை தேவன் அறிந்திருக்கிறார். கர்த்தர் உங்கள் மேல் நினைவாய் இருக்கிறார் உங்கள் கண்ணீரின் நாட்கள் நிச்சயமாய் முடிந்துபோகும். தேவன் உங்களை உயர்த்தி மேன்மைபடுத்துவார். இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.(உபா 28:14). பல வேளைகளிலே உங்கள் விசுவாசக்குறைவுகளின் நிமித்தமாய் ஆண்டவர் என்னை மறந்து விட்டாரே என்று கதறுகிறீர்கள். ஆனால் தேவன் உங்கள் மேல் நினைவாய் இருக்கிறார். எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படிச் செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது, என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.(ஓசியா 11:8). இன்றைக்கும் இயேசு கிறிஸ்து உங்களை நினைத்திருக்கிறபடியினால் பிதாவின் வலதுபாரிசத்தில் உங்களுக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். உங்களுக்காக வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்துகொண்டிருக்கிறார். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர், அவரே எழுந்துமிருக்கிறவர், அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே.(ரோமர் 8:34). அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.(ரோமர் 8:26). கர்த்தர் அவளை நினைத்தருளினார்(சாமு 1:19). குழந்தை இல்லாத பிரச்சனை அன்னாளை வாட்டின போது அவள் தேவாலயத்திற்கு போய் மனங்கசந்து அழுதாள். அன்னாளுடைய ஜெபம் கர்த்தருடைய சமுகத்தில் அவருக்கு நினைப்பூட்டுதலாய் இருந்தது. தம்மை நோக்கு இரவும், பகலும் கூப்பிடுகிறவர்களை தேவன் ஒருபோதும் மறந்துபோகிறவர் அல்ல. அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.(லூக்கா 18:7-8). பிரியமானவர்களை, நீங்கள் ஜெபித்த ஜெபங்கள் ஒருநாளும் வீணாய் போவதில்லை. தேவன் உங்கள் கண்ணீரை புறக்கணித்து விட்டு ஒரு நாளும் கடந்து செல்வதில்லை. அன்னாளை நினைவுகூர்ந்து ஒரு குழந்தையை கொடுத்து ஆசீர்வதித்த தேவன் உங்களையும் நினைவுகூர்ந்து உங்கள் வேண்டுதலுக்கு பதில் கொடுப்பார். சிலநாள் சென்ற பின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.(1சாமு 1:20). எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்திக்கு ஏதுவாயிருக்கையில் தேவனே என்னை நினைத்தருளும் என்று ஜெபித்தான். ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.(ஏசா 38:3). கர்த்தர் எசேக்கியாவை நினைவு கூர்ந்தார். நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன், இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.(ஏசா 38:5) தேவன் எப்படி உங்கள் மேல் நினைவாக இருக்கிறாரோ அது போல நீங்களும் அவருடைய நினைவாக இருங்கள். அவர் உங்கள் வாழ்க்கையில் செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும் நினைவுகூருங்கள். கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய ப10ர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்,(சங் 77:11) அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமுமுள்ளவர்.(சங் 111:4) நீங்கள் எப்பொழுதும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செய்து, துதிப்பது அவருடைய நினைவாக இருப்பதாகும். எந்த சூழ்நிலையிலும் அவருடைய சமுகத்தை நாடி ஜெபிப்பது அவருடைய நினைவாக இருப்பதாகும்.
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார், இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். சங்கீதம் 115:12

Post a Comment