கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்


பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான தோமா முதலாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தார். சென்னையையும் கேரளாவின் கடற்கரைப் பகுதியையும் தன்னுடைய ஊழியஸ்தலமாக தெரிந்துக் கொண்டார். ஒரு முறை கேரளாவின் கடற்கரை வழியாக நடந்து வந்துக் கொண்டிருந்தபோது, அங்கு ஒரு பெரிய மதத்தின் தலைவரோடு அநேகர் கூட்டமாக நின்று கையில் தண்ணீரை அள்ளி சூரியனை நோக்கி தெளித்து, சூரியனை கடவுளாக வணங்குவதைக் கண்டார். 

அதைக் கண்டவுடன் ஆவியில் வைராக்கியம் கொண்டவராய், தோமா 'சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கிய ஆண்டவா ஒருவர் இருக்கிறார். அவர்தான் இயேசுகிறிஸ்து. அவர் அற்புதங்களை செய்கிறவர். அவர் இன்றைக்கும் ஜீவனோடிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறேன்' என்று சவால் விட்டார். அந்த சவால் என்னவென்றால். பூசாரிகளும் தோமாவும் கடல் தண்ணீரை கடலிலிருந்து எடுத்து வானத்திற்கு நேராக எறிய வேண்டும். தண்ணீர் அள்ளப்பட்ட அந்த இடத்தில் தண்ணீருக்கு மத்தியில் பள்ளம் விழ வேண்டும். மட்டுமல்ல, வானத்தில் எறியப்பட்ட தண்ணீர் வானத்தில் அப்படியே நிற்க வேண்டுமென்பதாகும்.

முதலில் அந்த மதத்தவர் அவ்விதமாக தண்ணீரை எறிந்தார்கள். தண்ணீரை அள்ளிய இடம் மீண்டும் தண்ணீரால் சூழப்பட்டது, ஆகாயத்தில் எறியப்பட்ட தண்ணீரும் புவிஈர்ப்பு விசையின் காரணமாக கீழே விழுந்தது. அதன் பின்பு தோமா தன்னுடைய குரலை உயர்த்தி, 'ஜீவனுள்ள இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் கட்டளையிடுகிறேன், தண்ணீரே ஆகாயத்தில் அப்படியே நில்' என்று சொல்லி தண்ணீரை அள்ளி மேலே எறிந்தார். என்ன ஆச்சரியம்! தண்ணீர் ஆகாயத்தில் அப்படியே நின்றது. அவர் தண்ணீர் எடுத்த பகுதியில் அந்த இடம் அப்படியே பள்ளமாக இருந்தது.

இந்த அற்புதத்தை கண்டவுடன் அங்கிருந்த பூசாரிகள் மற்றும் அந்த மதத்தின் முக்கியமானவர்கள் அத்தனைப்பேரும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள். தோமா அப்போஸ்தலர் அவர்களை கிறிஸ்துவண்டை அருமையாக வழிநடத்தினார். இன்றைக்கும் கேரளாவிலிருக்கிற மார்த்தோமா சபையார் தோமாவின் காலத்திலிருந்தே கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள்.

கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? - (யாத்திராகமம் 15:11).

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post