உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே

உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; - பிரசங்கி 7:9

வேதத்திலே கோபத்தாலும் அவசரத்தாலும் நிதானத்தை இழந்து செயல்பட்ட ஒரு தேவமனிதனைப் பற்றி பார்த்து அதிலுள்ள பயனுள்ள பாடத்தைக் கற்றுக் கொள்வோம். பொறுமையின் சிகரமாகிய மோசே இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்கு அழைத்துச் செல்கிறார். போகும் வழியில் எப்பொழுதெல்லாம் ஜனங்கள் முறுமுறுத்து கலகம் பண்ணினார்களோ, அப்பொழுதெல்லாம் மோசே தேவசமூகத்தில் போய் விழுந்து கிடந்து ஜனங்களுக்காக பரிந்து பேசி தேவனுடைய கோபத்தை மாற்றி, சாதகமான பதிலை தேவனிடமிருந்து பெறுவார்.

இப்படி அவர்களின் பயணத்தில் ஒருமுறை ஜனங்களுக்கு குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது. இவர்கள் எப்பொழுதும் போல மோசே மேல் சாட ஆரம்பித்தார்கள். மோசே தேவசமூகத்தில் போய் விழுந்தார். தேவன், “நீ கோலை எடுத்துக்கொண்டு...கன்மலையைப் பார்த்து பேசு...அது தண்ணீர் கொடுக்கும்.” (எண்.20:8) என்றார். ஆனால் நடந்தது என்ன? மோசே கையிலிருந்த கோலால் கன்மலையை ஒருமுறை மாத்திரமல்ல, இருமுறை அடித்தார். இச்செயலால் தேவன் மோசேயிடம் கோபம் கொண்டார். தேவன் கோலை எடுக்கச் சொன்னது உண்மைதான். ஆனால் அடிக்கச் சொல்லவில்லை. மோசே செய்த இத்தவறுக்கு காரணம் ஜனங்கள் மேல் அவர் கொண்டிருந்த எரிச்சலும், கோபமுமே! அதுவே அவரை பொறுமையிழக்கச் செய்தது. பலமுறை ஈட்டியால் மனதை குத்தும் அவர்களது வார்த்தையைப் பொறுத்திருந்த அவர் இம்முறை ஏனோ பொறுமையை இழந்து விட்டார். முடிவு, “கானான் தேசத்திற்குள் பிரவேசிக்க முடியாது” என்று தண்டனை பெற்றுவிட்டார். இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்குமளவிற்கு இது என்ன பெரிய தவறா என நமக்குத் தோன்றலாம். ஆனால் ஆண்டவரது நியாயத்தீர்ப்பு முற்றிலும் வித்தியாசமானது. அவர் பட்சபாதமில்லாத தேவன்! 

தேவப்பிள்ளைகளே! நாமும் பொறுமையைக் கையாள பழகிக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வை சற்று பின்நோக்கிப் பார்ப்பீர்களானால் அதில் எத்தனைமுறை அவசரத்தில் தவறான முடிவெடுத்து விட்டு பின் வருத்தப்பட்டிருக்கிறீர்கள். நமது பொறுமையை இழக்கச் செய்யும் சூழ்நிலைகள் நம் வாழ்வில் கட்டாயம் வரத்தான் செய்யும். அந்த சூழ்நிலையில் பதற்றமடையாமல், அவசர புத்தியுடன் செயல்படாமல், சிந்திக்கும் திறனை இழந்து விடாமல் பொறுமையைக் காத்துக்கொள்வோம். நிதானத்தோடும், விவேகத்தோடும் அதைக் கையாள முயற்சி செய்வோம். அதன் மூலம் தேவநாமம் மகிமைப்படும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post