பிதாவே, இவர்களுக்கு மன்னியும்

பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.” – லூக்கா :23:34

1999ம் ஆண்டு ஜனவரி 23ம் நாள்: மிஷனெரியும் தொழுநோயாளிகளின் நண்பனுமான கிரஹாம் ஸ்டெயின்சும் அவரது இரண்டு சின்னஞ்சிறு மகன்களும் ஜீப்பிற்குள்ளேயே எரிக்கப்பட்ட கருப்புதினம். இச்செய்தி உலகத்தாரை உறையச் செய்தது; நம் உள்ளத்திலோ மிஷனெரி சவாலைப் பற்றி எரியச் செய்தது.

ஒடிசா மாநிலத்திலுள்ள குஷ்டரோகிகளின் மறுவாழ்வு மையத்தில் 1965ம் ஆண்டு அடி எடுத்து வைத்தார் கிரஹாம் . 1983ல் கிளாடிஸ் என்ற நற்குணசாலியான பெண்ணை திருமணம் முடித்தார். அவர்களுக்கு எஸ்தர், பிலிப்பு, தீமோத்தி என்ற மூன்று கண்மணி பிள்ளைகள் பிறந்தனர். அன்று தன் இரு ஆண்பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு ஜீப்பில் ஊழியத்திற்காக சென்றனர். வீடு திரும்ப எண்ணிய போது மிகவும் இருட்டிவிட்டதால் களைப்பில் மூவருமே ஜீப்பிற்குள் உறங்கிவிட்டனர். நள்ளிரவில் சுவிசேஷ எதிர்ப்பாளர்களாகிய தீயகுணம் நிறைந்த கூட்டம் அவர்களை சூழ்ந்து கொண்டது. அவர்கள் கனநித்திரையில் இருந்த நேரத்தில் பெட்ரோலை ஊற்றி வண்டிக்கு தீ வைத்தனர். வெப்பத்தினால் விழித்தவர்கள் கத்தினர், கதறினர். ஈவு இரக்கமற்றவர்கள் பரிகசித்து சிரித்தனர். சின்னஞ்சிறு பாலகர்கள் இருவரும் தந்தையை கட்டிப்பிடித்தவாரே கருகிய மலர்களாயினர்.

செய்தி அறிந்த மனைவியும், மகளும் என்ன வேதனையடைந்திருப்பர்! நினைக்கும் போதே நெஞ்சம் வலிக்கிறதல்லவா? ஒரே இரவில் அன்பு கணவரையும், ஆசை பிள்ளைகளையும் இறக்க கொடுத்த ஒரு பெண்ணை ஆற்றித்தேற்ற முடியுமோ? ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா? அணைகட்ட முடியாத துக்கத்தை இதயத்தின் ஓரத்திற்கு தள்ளிவிட்டு, கிறிஸ்துவின் சிந்தையோடு “என் கணவரையும் பிள்ளைகளையும் கொன்றவர்களை மன்னிக்கிறேன்” என்றார். இந்த பதிலைக் கேட்ட மீடியாவும், பத்திரிக்கையாளர்களும் வாயடைத்து நின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட தாராசிங் மற்றும் அவருடன் இருந்த 11 பேருக்கும் இந்த செய்தி சென்றது. கல்லாயினும் உளிபட்டால் உடையத்தானே செய்யும்! உலகத்தின் பார்வையில் இம்மூவரும் எரிக்கப்பட்டவர்கள்; நம் பார்வையில் எரிந்து பிரகாசிப்பவர்கள்!

பிறரை மன்னிக்க மறுக்கும் இதயமே! உங்களுக்கு எதிராய் குற்றம் புரிந்தவர்கள் தாராசிங்கை விட கொடுமையானவர்களா? அவரையே கிளாடிஸ் மன்னிக்கும் போது, ஏன் நம் சகோதரனை, நண்பனை, மனைவியை, குடும்பத்தாரை, அயலகத்தாரை சக ஊழியர்களை மன்னிக்க முடியாது? யோசியுங்கள்! தேவ அன்பு நம் உள்ளத்தில் இருக்குமென்றால் மன்னிக்கும் மாண்பும் நமக்குள் இருக்கும். போர்க்களமாயுள்ள எந்த இடத்திலும் மன்னிப்“பூ” மட்டும் பூத்து விட்டால் எத்தனை நறுமணம்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post