அழிந்து போகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்

அழிந்து போகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு,…” -1பேதுரு 1:7

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் மாதம் 25ம் நாள் மேற்கு வங்காளத்தில் டார்ஜிலிங் மலைப்பட்டணத்தில் தூறலாக ஆரம்பித்த மழை, வர வர கடுமையான புயலுடன் கொட்ட ஆரம்பித்தது. பட்டணத்தின் ஒரு மலை விளிம்பிலிருந்த அந்த மிஷனெரி பங்களாவிற்குள் 17 வயது முதல் 5 வயது வரையுள்ள ஆறு பிள்ளைகள், பணிப்பெண்ணின் கவனிப்பின் கீழ் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த கோரமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பங்களா பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்தது. அதற்குள் இருந்த 6 மிஷனெரி பிள்ளைகளும் பணிப்பெண்ணும் புதையுண்டு மாண்டு போய்விட்டனர். யார் இந்த பிள்ளைகளின் பெற்றோர்? அமெரிக்காவிலிருந்து நம் இந்தியாவிற்கு வந்த மிஷனெரி லீ-யும் அவரது மனைவி அடால் லீ-யுமே! 

ஜீரணிக்க முடியாத இச்செய்தி அவர்கள் காதுகளுக்கு வரும்போது அவர்கள் கல்கத்தாவிலிருந்தனர். 6 அன்பு பிள்ளைகளையும் ஒரே நாளில் மரிக்கக் கொடுத்த தாயின் மனம் எப்படித் துடித்திருக்கும்! ஆயினும் வீட்டை அசைத்த இந்த கோர புயலால் அவர்களின் விசுவாசத்தை அசைக்க முடியவில்லை. தங்கள் பிள்ளைகள் கண்ணீர் கவலையில்லாத மோட்ச வீட்டில் இயேசு கிறிஸ்துவுடன் இருப்பதை எண்ணி ஆறுதலடைந்தனர். அந்த கண்ணீரின் நாட்களில் அடால் தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதம் இதோ, “நமது கிறிஸ்தவ வாழ்வில் உபத்திரவத்தின் குகையானது சாதாரணமாயிருப்பதைக் காட்டிலும், ஏழு மடங்கு அக்கினியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான் அக்கினி சூளையில் காணப்படும் நான்காவது நபரின் சாயலை நாம் காணமுடியும். ஒவ்வொரு உபத்திரவத்தின் குகைக்கு அருகிலும் புடமிடுவோனாகிய கர்த்தரும் கட்டாயம் உட்கார்ந்து கொண்டுதான் இருப்பார். நான் சோதிக்கப்பட்ட பின் பொன்னாக விளங்குவேன்” என எழுதினார். 

பின் வங்காளத்தில் 522 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயானார் அடால் லீ. அவரது விடுதியில் படித்த மாணவர்கள் பேராயர்களாகவும், ஊழியர்களாகவும், உயர்பதவியிலும் வைக்கப்பட்டனர். “வங்காளத்தில் ஏற்பட்ட எழுப்புதலுக்கு லீ குடும்பத்தின் பங்கு பெரியதே” இன்றும் லீ மிஷன் மூலம் அவரது பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. 

விசுவாச கூட்டத்தாரே! சிறு பிரச்சனை, சின்ன பாடு வந்தாலே, “நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் தேவன் இதை அனுமதித்தார்? என கேள்வி கேட்கும் நமக்கு லீ-யின் வாழ்வு பெரிய சவாலல்லவா! யோபுவைப் போல இழப்பிலும் தேவனை விட்டுப் பின்வாங்காமல், விசுவாசத்தில் உறுதியாய் நின்று கொடுக்கப்பட்ட ஓட்டத்தை ஓடி முடித்த இவர்கள், விசுவாச வீரர்கள் அல்லவா? இவர்களின் வாழ்வு நமக்குச் சொல்லும் செய்தி என்ன? கிறிஸ்தவ வாழ்வில் புடமிடப்படும் சூழ்நிலை வரலாம், ஆனாலும் கர்த்தர் நம் அருகில்தான் இருக்கிறார். ஆம், பாடுகள் பரமனை விட்டு நம்மை தூரப்படுத்த அல்ல, கிட்டி நெருங்கிச் சேரவே!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post