தந்திரக்காரரின் கைகள்

தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.” – யோபு 5:12 

ஒருமுறை இயேசுகிறிஸ்துவிடம் சீஷர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள். “ஆண்டவரே, உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்கு சொல்ல வேண்டும்” என்று. அதற்கு இயேசு சொன்ன பதில், ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்! எவ்வளவு உண்மையான வார்த்தை பார்த்தீர்களா? நாம் வஞ்சனை நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒன்று திருவசனத்தைக் கேட்டு அதன்படி செய்யாதிருப்போமானால் நம்மை நாமே வஞ்சித்துக்கொள்கிறோம்; அதே வேளையிலே மற்றவர்களாலும் நாம் வஞ்சிக்கப்படமுடியும். உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித்திரிகிறான். ஆகவே மனிதர்களுடனான உறவிலும் கவனமாயிருக்க வேண்டும்.

இரண்டு ஆவிக்குரிய சிநேகிதிகள் இருந்தார்கள். ஒரு சகோதரி மற்ற சகோதரியை நம்பி தன் இருதயத்தின் காரியங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் மற்ற சகோதரியோ இந்த இரகசியங்களை எல்லாம் நல்லவர் போல கேட்டுவிட்டு, தன்னுடைய மற்ற சிநேகிதிகளிடம் சொல்லி அவர்களுடைய நற்சாட்சி கெடும்படி கெட்ட பெயர் உண்டுபண்ணி விட்டார். ஆனால் நேரில் பார்க்கும் போது மிகவும் அன்பாக உதவி செய்பவராக, கூடவே இருப்பவராக காண்பித்துக் கொண்டே இருந்தார். ஆனால் தேவ ஆவியானவர் ஜெப வேளையிலே இதை அந்த முதல் சகோதரிக்கு வெளிப்படுத்தி, விடுவித்தார்.

தாவீதிற்கு விரோதமாய் அவரது சொந்த மகன் அப்சலோம் வஞ்சனை செய்து தாவீதிடம் வரும் ஜனங்களை தம் வசமாய் திருப்பிக் கொள்ள சூழ்ச்சி பல செய்தான். தாவீதை தேடி வரும் ஜனங்களிடம், தான் மிகவும் அன்புள்ளவன் போல அவர்களை தழுவி முத்தம் செய்வான். இப்படியாய் இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தை கவர்ந்து கொண்டான். ஜனங்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் அவன் பின்னால் போனார்கள் என்று இன்றைய வேதபகுதியில் வாசிக்கிறோம்.

பிரியமானவர்களே! நம்மைச் சுற்றிலும் இப்படிப்பட்ட அப்சலோம்கள் உண்டு. இந்த வஞ்சனைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் விழித்திருந்து ஜெபித்து ஆவியானவரோடு நடக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்போது மனிதர்களின் பொல்லாத ஆலோசனையிலிருந்து தப்பி ஜெயமெடுப்போம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post