சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்

சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறவர்களுடனே...” - 2தீமோ.2:22

மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ள ஆலோசனை வாலிபனான தீமோத்தேயுவிற்கு பவுலடியாரால் கூறப்பட்டது. வாலிப வயதில் வரும் முக்கிய சோதனை கண்களின் இச்சையாகும். எதிர்பாலரை தவறான சிந்தையோடு பார்ப்பது அவற்றில் ஒன்று! பெரும்பாலான தவறுகளின் பிறப்பிடம் சிந்தனைதான். கண்களால் பார்த்து, இருதயத்தில் கற்பனை செய்யும் தவறு, சரீரப் பிரகாரமாக செய்யும் தவறுக்கு ஒப்பானதாகும். (மத்தேயு 5:27,28)

இந்த பாலியத்திற்குரிய சோதனைகளைத் தவிர்க்க வேதம் காட்டும் ஒரே வழி “ஓடு” என்பதாகும். இதன் அர்த்தம் என்னவென்றால், “நம்முடைய சிந்தையை கறைப்படுத்தும் சூழ்நிலைகளில்” நாம் நிற்காதபடி துரிதமாக விலகுவதே ஆகும். ஒரு புத்தகத்திலுள்ள படமோ, அல்லது கதையோ உங்கள் இருதயத்தை கறைப்படுத்தும் என எண்ணினால் உடனே அதை கிழித்து எறிந்து விடுங்கள். தவறான எண்ணங்களை கொடுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் போகாமல் அதை விட்டு விலகி வேறு நல்ல ஆரோக்கியமான பொழுது போக்கிற்கு இருதயத்தை திருப்புங்கள். எதிர்பாலரோடு தவறு செய்யும் சூழ்நிலைகள் வரும்போது யோசேப்பைப் போல விலகியோடுங்கள்.

இந்த கண்களின் இச்சை வயது வரம்பின்றி எவரோடும் எப்போதும் போராடலாம். திருமணமான தாவீது, போத்திபாரின் மனைவி இவர்களெல்லாம் நமக்கு எச்சரிக்கையாக எழுதப்பட்டுள்ளார்கள். ஆகவே இச்சைகளுக்கு விலகியோட வேண்டிய ஆலோசனை திருமணமாகாதவர்களுக்கு மட்டுமுரியதல்ல, அனைவருக்கும் உரியதே. ஆகவே கிறிஸ்துவின் வழியில் நடக்க விரும்பும் நாம் ஒவ்வொருவரும் எப்போதும் தீயவற்றிற்கு விலகி ஓட ஆயத்தமாயிருக்க வேண்டும்.

சரி.... இச்சைகளுக்கு விலகி ஓடி நாம் எங்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் வரலாம். மேற்கண்ட வசனத்தை நாம் பார்க்கும்போது கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிறவர்களோடே இருக்க நாடவேண்டும். அதாவது நல்ல கிறிஸ்தவ ஐக்கியத்திற்கு ஓடி நம்மை இணைத்துக் கொள்ளவேண்டும். ஆம், தவறான உறவுகளின் பாதையில் போய்விடாதிருக்க வேண்டுமானால், சரியான உறவுகளில் நம்மை இணைத்துக் கொள்ளவேண்டும். ஆகாத உறவுகளில் விழுந்து விடாமல் இருக்க வேண்டுமானால் தேவ உறவு என்னும் பாதுகாப்பான இடத்திற்குள் வந்துவிட வேண்டும். தேவனோடு உறவு கொண்டால் மட்டுமே பாவ உறவினால் வரும் சந்தோஷங்களை வேண்டாம் என்று வெறுக்க முடியும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post