கலங்கும் தேவ பிள்ளையே

கலங்கும் தேவ பிள்ளையே ! 

ஒரு சிறிய உவமை மூலமாய் உங்களோடு சில காரியங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். இது ஒரு சிறிய உவமைதான் என்றாலும் இதில் பொதிந்துள்ள உண்மை விசேஷமானது.
கர்த்தருடைய தேசமான இஸ்ரவேல் தேசத்தின் மோரியா மலை அடிவாரம். அங்கு கனிதரும் மரங்கள் ஏராளமாய் இருந்தன. அந்த பகுதியில் குறிப்பிடும்படியாய் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்துக்கு “ மர் “( எபிரேய பெயர் ) என்று பெயர். அந்த மரம் மிக உயரம் குறைவானது; அதனால் மிகப் பெரிதாக வளர முடியவில்லை; அதன் அதிக பட்ச உயரமே 12 அடிதான்; அவ்வளவே அதன் உயரம்; ஆகையால் அதைச் செடி என்றும் சிலர் கருதுவதுண்டு. அதன் கிளைகளும் அவ்வளவு பெரிதாக வளரவில்லை; அதன் தண்டுப்பகுதி மிக கடினமான ஒன்றாயிருந்தது; அதன் இலைகளும் அவ்வளவு அடர்த்தியாயில்லை. ஆனாலும் மஞ்சள் நிறப்பூக்களோடும், திராட்சைப் பழ வடிவில் அதன் சிறிய கனிகளோடும் பார்ப்பதற்கு மிக அழகாக காணப்பட்டது.
இஸ்ரவேலர்கள் கூடாரப் பண்டிகை கொண்டாட நற்கனிகளைத் தேடி மலைக்கு வருவது வழக்கம். அந்தப் பிரகாரம் பழங்களைத் தேடி அநேக இஸ்ரவேலர் வந்தார்கள். ஆனால் அந்த மர் மரத்தின் அருகே ஒருவர் கூட வரவில்லை. அந்த மரத்தைப் பார்க்கிற போதே எல்லாருக்கும் ஒரு வெறுப்பு ஏற்பட்டது. மற்ற மரங்களை எல்லாம் விரும்பி நாடிச் சென்றவர்கள் இந்த மர் மரத்தை மட்டும் உதாசீனப்படுத்தினார்கள்.
சரி மனிதர்கள்தான் இப்படி என்றால் பறவையினங்களும் ஒன்று கூட அதன் கிளைகளில் வந்து அமரவோ அதன் கனிகளைப் புசிக்கவோ வரவில்லை. இது ஏன் என்று அந்த மரத்துக்கு புரியவேயில்லை. இது அந்த மர் மரத்துக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது.
ஒரு நாள் அந்த மரம் பார்த்துக் கொண்டிருக்கையில் அதன் அருகில் நின்ற ஒலிவ மரத்தில் அநேகர் ஒலிவப் பழங்களைப் பறித்தார்கள். ஆனால் அந்த மர் மரத்தை ஒருவர் கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை. அந்த மர் மரம் மனமுடைந்து போனது. அது பார்த்துக் கொண்டிருக்கையில் இஸ்ரவேலனாகிய ஒரு சிறுவன் ஓடி வந்து மர் மரத்தின் கனிகளில் சிலதைப் பறித்தான். மர் மரத்துக்கோ மிகுந்த சந்தோஷம்.
தன் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சிறு பையன் தன் கனிகளைப் பறித்துப் புசிக்கப் போவதை ஆவலாய்ப் பார்த்தது. ஆனால் அதற்குள் அந்த சிறு பையனுடைய தகப்பன் விரைந்து வந்து அவன் கையில் இருந்த மர் மரத்தின் கனிகளைத் தட்டிவிட்டான். அவன் அந்தப் பையனிடம் அந்த மர் மரத்தைக் காட்டி, “ இந்த மர் மரத்தின் உச்சிக் கொப்பு முதல் அதன் வேர் வரை அத்தனையும் கசப்பு சுவை உடையது. அதைத் தொடாதே ” என்றான்.
மர் மரத்துக்கு அப்பொழுதுதான் காரியம் புரிய ஆரம்பித்தது. தன் பூ, இலை, கனி, மரப்பட்டை, வேர் என்றூ அத்தனை பாகங்களும் கசப்பு ( Bitterness ) மிகுந்தது என்று. ஆம் அதன் சகல பாகங்களும் வாயில் வைக்க முடியாத அளவு கசப்பானது. அந்த மரம் மிகவும் துயருற்றது.
மர் மரம் தன் அருகே நின்றவர்களை எல்லாம் கூப்பிட்டு புலம்ப ஆரம்பித்தது. “ ஐயா கசப்போடு படைக்கப்பட்டது என் தவறல்ல, என் கசப்புச் சுவைக்கு நான் காரணமல்ல, உங்களைப் படைத்த தேவன் தான் என்னையும் படைத்தார். அவர் தான் இந்த கசப்பை என்னுள் வைத்துவிட்டார். நான் என்ன செய்வது. ஐயா என்னைப் புறக்கனிக்காதீர்கள், என் கனிகளிலும் சிலதை எடுத்துச் செல்லுங்கள். ஐயா எடுத்துச் செல்லுங்கள் “ என்று கெஞ்சியது. ஆனால் ஒருவர் கூட அதன் சத்தத்தைக் கேட்கவில்லை.
மனிதர்கள் தான் தனக்குச் செவிகொடுக்கவில்லை. பறவைகளையாவது கூப்பிடலாம் என்று அவற்றையும் கூப்பிட்டுப் பார்த்தது. ஆனால் பறவைகளோ மாறுத்தரமாக “ நாங்கள் எத்தனையோ கசப்பான மரங்களின் கனிகளைப் புசிக்கிறோம். ஆனால் உன்னுடைய கனிகளைப் போல் கசப்பான கனியை நாங்கள் பார்த்ததில்லை. அது எங்களுக்கு வேண்டாம். அவை புசிக்கத் தகாதவை “ என்று சொல்லி விட்டன. மர் மரம் தன்னுள் உடைந்து போனது.
அந்த மர் மரம் தேவனை நோக்கி கூப்பிட ஆரம்பித்தது. “ என்னை உருவாக்கின என் தேவனே, எத்தனையோ சிருஷ்டிப்புகள் இருக்கின்றன. எத்தனையோ விதமான மரங்கள் உள்ளன. ஆனால் எனக்குள் மட்டும் இப்படி ஒரு கசப்பை நீர் வைத்ததென்ன ? கசப்போடு படைக்கப்பட்டது என்னுடைய தவறா? நான் என்ன செய்வேன் ? ஏன் என் வாழ்க்கையில் இவ்வளவு கசப்பு ? ஏன் என் வாழ்க்கையில் இந்த கசப்பை அனுமதித்தீர் ? என் கசப்பை என்னிடத்தில் இருந்து எடுத்துவிடும், என்னை மாற்றும் “ என்று கெஞ்ச ஆரம்பித்தது..
தன்னை நோக்கி கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் பதில் கொடுக்கிற இரக்கமுள்ள தேவன் அல்லவா அவர். தேவன் பதில் கொடுத்தார். அவர் கொடுத்த பதில் இதுதான், “ காத்திரு “ என்பதே. தேவனுடைய வார்த்தையை நம்பி மர் மரமும் காத்திருந்தது. மாதங்கள் சென்றது. வருஷங்கள் கடந்தது. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. அதன் வளர்த்தியிலோ உருவத்திலோ அதன் சுவையிலோ எந்த மாற்றமும் வரவில்லை.
மர் மரம் தினமும் பரலோகத்தின் தேவனை நோக்கிப் கூப்பிட ஆரம்பித்தது. தன்னைப படைத்த தேவனிடத்தில் முறையிட்டது. சில நேரங்கள பதில் வந்தது. பல நேரங்களில் பரலோகம் மெளனமாயிருந்தது. மர் மரத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்னுடைய கசப்பைக் குறித்த தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள் எல்லாம் பொய்த்து விட்டனவோ என்று கூட எண்ணியது. தன் வாழ்க்கையில் ஏன் இந்த கசப்பு ? ஏன் இந்த Bitterness ? ஏன் இந்தக் குறை ? இயற்கைக்கு அப்பாற்பட்டு என் வாழ்க்கையில் ஏன் இப்படி ? என்று அங்கலாய்த்தது. மர் மரமும் எத்தனை நாள் தான் பொறுத்திருக்கும் ?
ஒரு நாள் வியாகுலத்தின் மிகுதியால் உரத்த சத்தத்தோடு தேவனிடத்தில் விண்ணப்பிக்க ஆரம்பித்தது. “ என் தேவனே எனக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் எல்லாம் என்னவாயிற்று ? என் கசப்பு என்றைக்கு ஐயா மாறும் ? என் வாழ்க்கையில் உள்ள கசப்பைக் குறித்து உம்முடைய திட்டம்தான் என்ன ? ஏன் அதை என் வாழ்க்கையில் அனுமதித்தீர் ? என்னுடைய மனக்குறை என்றைக்கு தீரும் ? நானும் மற்றவர்களைப் போல் ஆசீர்வதிக்கப்படுவது எப்போது? என்னுடைய ஏக்கங்களுக்கெல்லாம் ஒரு முடிவில்லையா ? என்னுடைய கசப்பை மாற்ற மாட்டீரா ? எனக்கு ஒரு அற்புதத்தைச் செய்ய மாட்டீரா ? தேவனே எனக்கு இரங்கும், இரங்கும் “ என்று கதற ஆரம்பித்தது.
அதன் உச்சிக் கொப்பு முதல் அதன் வேர் வரை தேவனை நோக்கி கூப்பிட்டன. அதன் ஆழ் மனதில் இருந்து அங்கலாய்ப்பு வெளிப்பட்டது. அந்த மரத்தின் கூக்குரல் மேலெழும்ப ஆரம்பித்தது. அதன் பெருமூச்சு அதிகமாயிற்று. அதன் வியாகுலத்தினால் அதன் கனத்த இருதயம் வெடித்து விடும் போல் இருந்தது.
அதன் உள்ளமெல்லாம் உடைய ஆரம்பித்தது. அதன் இருதயம் நொறுங்க ஆரம்பித்தது. தன் இருதயத்தை உடைத்து ஊற்றி அது அழ ஆரம்பித்தது. அதன் வேதனையை அதனால் தாங்கிக் கொள்ள முடியாமல் மர் மரம் வியாகுலத்தால் கண்ணீர் விட்டது. அதன் பட்டைகள் எல்லாம் உறிய ஆரம்பித்ததன. அதன் தண்டு பகுதிகளெல்லாம் வெடிக்க ஆரம்பித்தது. அதன் கிளைகளில் கீறல்கள் விழுந்தன. அதன் கிளை மூட்டுகளில் எல்லாம் விரிசல் ஏற்பட்டது. அவற்றின் வழியே அதன் கசப்பு எல்லாம் கண்ணீராக வெளிவர ஆரம்பித்தது. அதன் கசப்பான அதன் தாவர உயிர்ச்சாறு ( Sap ) எல்லாம் வெடிப்புகள் வழியாய் கொட்ட ஆரம்பித்தது. அது வேதனையை அடக்கமாட்டாமல் அதன் கண்ணீர் பெருக்கெடுத்தது. அதன் கூக்குரல் பரலோகத்தை எட்டியது.
மர் மரத்தின் கசப்பு எல்லாம் கண்ணீராக வெளிப்பட வெளிப்பட .அந்தப் பகுதியில் இருந்த எல்லோரும் ஒரு தெய்வீக வாசனையை உணர ஆரம்பித்தார்கள். உலகம் அதுவரை கண்டிராத வாசனை. அப்படி ஒரு சுகந்த வாசனையை மனுஷர் நுகர்ந்ததேயில்லை. அந்த பிராந்தியமே நறுமணத்தால் நிரம்பினது. அந்த வாசனையை நுகர்ந்தவர்கள் அத்தனை பேரையும் அது தன்பால் சுண்டி இழுக்க ஆரம்பித்தது. அந்த வாசனை எங்கிருந்து வருகிறது என்று தேடி அலைய ஆரம்பித்தார்கள். எல்லாரும் அந்த வாசனை வந்த திசையை நோக்கி ஓடி வர ஆரம்பித்தார்கள்.
அந்த வாசனை வருவது மர் மரத்தில் இருந்துதான் என்பதை எல்லோரும் அறிந்து கொண்டார்கள். மர் மரம் வடித்த அதன் கசப்பான கண்ணீர் ( Tears ) அதன் தண்டைச் சுற்றிலும் பிசினாக வடிந்து நின்றது. அதன் கிளைகளிலிருந்து தரையெல்லாம் சிந்தியிருந்தது. எல்லோரும் அதை போட்டி போட்டு பொறுக்கினார்கள். அதன் பிசினையெல்லாம் எனக்கு உனக்கு என்று பிய்த்து எடுத்தார்கள். அந்த மர் மரத்தின் கசப்பு எழும்பப் பண்ணின வாசனை அவ்வளாவாய் அவர்களை ஈர்த்தது. அந்த கசப்பான மர் மரத்தின் கண்ணீருக்கு ( பிசினுக்கு ) வேதம் ஒரு பெயர் கொடுத்திருக்கிறது “ வெள்ளைப்போளம் ”
யாத்திராகமம் 30 : 23-25 ல் ஆசரிப்புக் கூடார பரிசுத்த அபிஷேக தைலத்துக்கு தேவையான ஐந்து பொருள்களில் முதலாவதாய் தேவனால் குறிக்கப்பட்டது இந்த வெள்ளைப்போளம் தான். மர் மரத்தின் கசப்பு தெய்வத்தின் பார்வையிலே மட்டுமல்ல. உலகத்தின் பார்வையிலும் பிரீதியாய்க் காணப்படுகிறது. மர் மரத்தின் கசப்பான கண்ணீர் தான் வெள்ளைப்போளம் ( Myrrh Tears ) என்ற பெயரில் உலகமே விரும்பப்படத் தக்க ஒன்றாய் மாறிவிட்டது. வெள்ளைப்போளத்தை வணிகர்கள் இன்றும் Myrrh Tears (வெள்ளைப்போள மரத்தின் கண்ணீர்) என்றே அழைக்கிறார்கள். தங்கத்தைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. மர் மரத்தின் கசப்புதான் (Bitter) அதன் சிறப்பாக (Better) மாறிவிட்டது. மர் மரத்தின் Bitterness ஐ எல்லாம் தேவன் அதன் Betterness ஆக மாற்றிவிட்டார்.
எனக்கன்பானவர்களே, மர் மரத்தைப் போல் உங்கள் வாழ்க்கையில் உள்ள சில குறைவுகள், அல்லது நீங்கள் சந்தித்த நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையை கசப்பாக்கி இருக்கிறதா ? கசப்பான காரியங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறீர்களோ ? இயற்கைகு அப்பாற்பட்டு காரியங்கள் உங்கள் வாழ்க்கையை கசப்பாக்கி விட்டதா ? கலங்க வேண்டாம். நிச்சயமாய் உங்கள் வாழ்க்கையின் Bitterness ஐ எல்லாம் உங்களுடைய Betterness ஆக மாற்ற தேவன் போதுமானவர்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post