நாம் பரிசுத்த வேதாகமத்தை எப்படி வாசிக்கின்றோம்.
“உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.” – சங்.119:97
மைக்கேல் பில்லெஸ்டர் என்றதொரு வேதாகம விநியோகஸ்தர் இருந்தார். இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக போலந்து நாட்டிலுள்ள கிராமங்களை சுற்றிப்பார்த்த அவர் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள கிராமவாசிக்கு வேதாகமம் ஒன்றைக் கொடுத்தார். அக்கிராமவாசி வேதாகமத்தை வாசித்ததின் மூலம் மனமாற்றமடைந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டார். பின்னர் தன்னுடைய கிராம மக்களுக்கும் வாசிக்கக் கொடுத்தார். மீண்டும் மீண்டும் மனமாற்றங்களும், வேதத்தை பகிர்ந்தளித்தலும் அந்த ஒரு வேதாகமத்தின் மூலம் 200 பேர் விசுவாசிகளாகும்வரை தொடர்ந்தது.
பில்லெஸ்டர் 1940ல் அங்கு திரும்பி வந்தபோது, இந்த குழுவினர் ஒரு துதி ஆராதனையில் ஒன்று கூடி, அவரைப் பிரசங்கம் பண்ணும்படி கேட்டுக்கொண்டனர். அவர் அந்தக் கூட்டத்திலிருந்த அநேகரை வேத வசனங்களை மனப்பாடமாய் சொல்லும்படி கேட்டுக்கொண்டார். ஒரு மனிதன் எழுந்து நின்று, “ஒரு வேளை நாங்கள் தவறாக புரிந்துகொண்டோமா? நீங்கள் வசனங்கள் என்கிறீர்களா? அல்லது அதிகாரங்களா?” என்று கேட்டார். காரணம் அக்கிராமவாசிகள் வேதத்தில் இருந்து ஒரு சில வசனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து மனனம் செய்யாமல், முழு அதிகாரங்களையும், புத்தகங்களையும் மனப்பாடம் செய்திருந்தனர். பதிமூன்று பேர் மத்தேயு, லூக்கா, ஆதியாகமத்தின் பாதி புத்தகம் ஆகியவற்றை அறிந்திருந்தனர். வேறொருவர் சங்கீதங்கள் முழுமையையும் அறிந்திருந்தார். பில்லெஸ்ட்டரால் கொடுக்கப்பட்ட ஒரேயொரு வேதாகமப்பிரதி அதனுடைய வேலையைச் செய்துவிட்டது.
ஒரு வேதாகமம் ஒரு கிராமத்தையே இரட்சிப்புக்குள் வழி நடத்தியுள்ளது. தாவீதின் சங்கீதத்திலே முதலாம் சங்கீதம் தொடங்கி அநேக இடங்களில் வேதத்தின் மீது எவ்வளவு பிரியமாயிருந்தார் என்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக சங்கீதம் 1,19,119 ஆகியவற்றில் இதை அறியமுடியும். விலையேறப்பெற்ற பொன் நகைகளை நாம் பார்க்கும்போது எப்படியெல்லாம் சந்தோஷப்படுகிறோம். அதின் அழகு, நேர்த்தி மற்றும் அதின் மதிப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம். அதைப் போலவே தாவீதும் வேதத்தின் மகத்துவங்களைப் பற்றி எழுத்து எழுத்தாக, வசனம் வசனமாக வர்ணித்துள்ளார். இவ்வுலகின் எல்லா பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் தேவனுடைய பரி.வேதாகமமே சிறந்தது என கூறுகிறார்.
பிரியமானவர்களே! இன்றைக்கு நாம் பரி.வேதாகமத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஏதோ ஒரு சில நிமிடங்கள் மட்டும் ஒரு அதிகாரத்தை பெயரளவிற்கு வாசிக்கும் தன்மை இன்று நம்மில் அநேகரிடம் காணப்படுகிறதல்லவா? இதை நம்மிடத்தில் தேவன் விரும்புவதில்லை. மாறாக நாம் அவருடைய வேதாகமம் மீது அளவற்ற பிரியம் கொள்வதையே நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
Post a Comment