TV (தொலைக்காட்சி

TV (தொலைக்காட்சி

“உனது பரிசுத்தத்திற்கு தக்கதாக உனது வெற்றி வாழ்வு அமையும்” “According to your holiness so shall be your success” என்றார் ஸ்காட்லாந்து தேச பரிசுத்த பக்தன் மர்ரே மச்செயின் (Murray McCheyne) என்பவர். உண்மையும், சத்தியமுமான வார்த்தைகள். நமது கிறிஸ்தவ பக்தி வாழ்வில் தேவனுடைய பரிசுத்த ஐக்கியத்திலிருந்து நம்மை பிரிக்கக்கூடிய எந்த ஒரு காரியத்திற்கும் நம்மை தேவ பெலத்தால் விலக்கிக் காத்துக் கொள்ளும் போது தேவன் நம்மை அநேகருக்கு ஆசீர்வாதமாக எடுத்து பயன்படுத்துவார். அன்பின் ஆண்டவருடைய உறவிலிருந்து நம்மை துண்டாடிப் போட சத்துருவாகிய பிசாசானவன் இந்த கடைசி நாட்களில் தனது கரத்தில் எடுத்திருக்கும் மகா பயங்கரமான ஆயுதம் தொலைக்காட்சி ஆகும். இந்த தொலைக்காட்சி என்ற சாதனத்தின் மூலமாக சாத்தானாம் பிசாசு கோடிக்கணக்கான மக்களை எரி நரகத்திற்கு மிகவும் எளிதாக வழிநடத்திக்கொண்டிருக்கின்றான். இந்தக் கடைசி நாட்களில் தொலைக்காட்சி பெட்டி இல்லாத வீடுகளே கிடையாது. சத்துருவானவன் ஒவ்வொரு வீட்டிற்கும் காசு பணம் இல்லாமலே தொலைக்காட்சி பெட்டிகளை முற்றும் இலவசமாக பலவந்தமாகக் கொடுத்து அவர்களை அழிவுக்கு நேராக வழிகாட்டி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றான். இதில் முற்றும் அடிமைப்பட்டிருக்கும் மக்கள் கிறிஸ்தவர்களே. வசதியான கிறிஸ்தவ மக்கள் தொலைக்காட்சி பெட்டிக்கு மாற்றாக படங்களை மிகவும் பெரிதாக காண்பிக்கும் கருந்திரை போர்ட்டுகளை தங்கள் வீட்டின் உட்காரும் அறையின் சுவரில் மாட்டி வைத்திருக்கின்றார்கள். அதின் காரணமாக அந்த வீடே ஒரு குட்டி திரை அரங்கமாக மாறியிருக்கின்றது. கரும் பெட்டிக்குத் தேவையான கேபிள் கனக்ஷன் எடுத்துவிட்டால் முழு உலகமே வீட்டுக்குள் வந்து விடும். விருத்தாப்பியர்கள் முதல் பாலகர் வரை யாவரும் அந்த திரைக்கு முன் ஆசை ஆவலாக அமர்ந்திருக்கின்றனர். சிறுவர், சிறுமியர், இளம் வயதுள்ளோர் வருடத்தின் குறிப்பிட்ட மாதங்களில் தெருக்களில் ஆனந்த களிப்போடு விளையாடும் கடந்த கால நாட்களின் அழகான விளையாட்டுகள் கோலாட்டம், கும்மி, சடுகுடு, கிளித்தட்டு, போன்றவைகள்எல்லாம் எப்பொழுதோ மாயமாய் மறைந்துவிட்டன. அந்த இடத்தை இப்பொழுது கம்பியூட்டர் விளையாட்டுகள் (Computer Games) ஆக்கிரமித்து விட்டன.

தங்கள் உலகப்பிரகாரமான வேலைகளிலிருந்து ஓய்வுபெற்ற பெரும்பாலான கிறிஸ்தவ விருத்தாப்பிய மக்களுக்கு மீதமுள்ள தங்கள் சொற்பமான விலையேறப்பெற்ற காலத்தை இரவும், பகலும் மிகவும் இலகுவாக வீணடித்து பாழாக்குவதற்கு தொலைக்காட்சியைவிட வேறு எந்த சாதனங்களும் கிடையாது. இரவில் நீண்ட மணி நேரம் வரை அவர்கள் தொலைக்காட்சி முன்னர் தங்கள் நேரத்தை செலவிடுகின்றார்கள். நாம் கேட்டால் “நாங்கள் சினிமா எல்லாம் பார்க்கமாட்டோம், உலகச் செய்திகள் நமக்கு அவசியம் தானே, ஆகையால் செய்திகளை மட்டும் பார்த்துவிட்டு உடனே பெட்டியை மூடிவிடுவோம்” என்கின்றார்கள். எத்தனை ஜாலமான வார்த்தைகளை ஆத்தும அழிம்பனாம் பிசாசு அவர்கள் வாயிலிருந்து பேசுகின்றான் பாருங்கள்! அந்தச் செய்திகளை பார்த்து முடிப்பதற்குள் எத்தனை விளம்பரங்கள்? எத்தனை தேவையில்லாத நமது இருதயத்தை கறைப்படுத்தும் காட்சிகளை எல்லாம் நாம் பார்க்க வேண்டியதாக இருக்கின்றது? நமது ஆத்துமாக்களை தேவ அன்பிலிருந்து துண்டாடிப் போட அவைகளே போதுமானதாக உள்ளதே!

ஓய்வு நாட்களில் சபையார் ஆலயத்தின் முதல் காலை ஆராதனையில் கடமைக்காக துரிதம் துரிமாக கலந்து கொண்டுவிட்டு எத்தனை ஜாக்கிரதையாக தொலைக்காட்சியில் வரும் சினிமா தொடர்களைப் பார்ப்பதற்கு தொலைக்காட்சி முன் வந்து அமருகின்றார்கள்.

புற்று நோயால் பீடிக்கப்பட்டு மரணத்தின் விழிம்பில் இருந்த ஒரு வயதான கிறிஸ்தவ மனிதரை நான் காணச் சென்றிருந்தேன். தனது இறுதி மணி நேரத்தில் அவர் முழங்கால்களில் நின்று தன்னை தேவனுடைய நித்திய இளைப்பாறுதலுக்கு பயத்தோடும், நடுக்கத்தோடும், கண்ணீரோடும் ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பார் என்று நான் அதிகமாக எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், நான் அவரது வீட்டிற்குச் சென்று அவரது அறைக்குள் பிரவேசித்தபோது நான் கண்ட காட்சி என்னை நடு நடுங்கப்பண்ணுவதாக இருந்தது. ஆம், அவர் படுக்கையில் இருந்தவாறே நல்ல பூரண மன நிலையோடு அந்த நாட்களில் நடந்து கொண்டிருந்த உலகக் கால் பந்துப் போட்டியை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் வந்ததைக் குறித்து அவருக்கு அத்தனை மகிழ்ச்சி ஏற்படவில்லை. காரணம், தனது சுவையான நிகழ்ச்சியை கவனிப்பதற்கு நான் இடையூறாக இருக்கின்றேன் என்பதை அவர் அதிகமாக உணர்வதாக எனக்குத் தெரிந்தது. நான் அதிக கால தாமதம் பண்ணாமல் அந்த மனிதருக்கு அன்பின் ஆண்டவரை கண்ணீரோடு உடனே நோக்கிப் பார்க்கவும், அவரை அண்டிக்கொள்ளவும் ஆலோசனை கூறி ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுத்துவிட்டு விரைவாக வெளியே வந்து விட்டேன். அவர்களுடைய மனைவி, பிள்ளைகள் கிறிஸ்தவ தேவாலய கல்லறைத் தோட்டத்தில் அந்த மனிதருடைய சடலத்தை மரித்த பின் எந்த இடத்தில் அடக்கம் செய்யலாம் என்று இடம் தேடிக் கொண்டிருப்பதாக என்னிடம் சொன்னார்கள். எத்தனை துயரம் பாருங்கள்! ஆ, சாத்தான் தேவ ஜனத்தை எத்தனையாக தொலைக்காட்சி மூலமாக தன் வசமாக்கிக் கொண்டான்!

தேவ ஜனமே, தொலைக்காட்சிக்கு முன்பாக நீங்கள் செலவிடும் நேரத்தை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிடுங்கள். திரண்ட தேவ ஆசீர்வாதம் காண்பீர்கள். அநேக கிறிஸ்தவர்கள் “நாங்கள் தொலைக்காட்சியில் வரும் அருமையான கிறிஸ்தவ பாடல்கள், பிரசங்கங்கள், சாட்சிகள், ஜெபங்கள், ஆண்டவரைத் துதித்துப்பாடி ஆர்ப்பரிக்கும் ஆடல், பாடல் பரவசக்காட்சிகளை எல்லாம் கண்டு ஆனந்திக்கின்றோம்” என்கின்றார்கள். நன்றாகப் பார்த்து ஆனந்தித்து மகிழுங்கள். ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பொன்னான காலத்தை ஆண்டவருடைய பாதங்களில் அல்ல தொலைக்காட்சி பெட்டி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் மட்டும் செலவிடுகின்றீர்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுடைய ஆத்துமாவுக்கு எந்த ஒரு ஆசீர்வாதத்தையும் கொண்டு வராது. ஒரு பரிசுத்தவான் இப்படிச் சொன்னார் Time spent with God, Time well spent. “தேவனோடு செலவிடப்பட்ட நேரம் பயனுள்ளவிதமாக கர்த்தருடைய நாம மகிமைக்காக செலவிடப்பட்ட நேரமாகும்”. தொலைக்காட்சியில் வரும் உலக செய்திகளையோ அல்லது கிறிஸ்தவ நிகழ்ச்சிகளையோ பார்த்துவிட்டு ஜெபத்திற்காக உங்கள் முழங்கால்களை தேவ சமூகத்தில் முடக்குங்கள். உங்களால் ஜெபிக்க முடியாமல் தேவனுடைய பிரசன்னம் உங்களை விட்டு விலகியிருப்பதை நீங்கள் நிச்சமயமாக உணருவீர்கள். நீங்களே உங்கள் மட்டாக இதை சோதித்துப் பார்த்து நலமானதை தெரிந்து கொள்ளுங்கள்.

தொலைக்காட்சியை விட நம் ஆத்துமாவுக்கு அதிக கேடு விளைவிக்கக்கூடிய ஒரு சாதனம் உண்டு. அதுதான் நெட் வசதியுள்ள நமது கம்பியூட்டர் ஆகும். கம்பியூட்டரில் வலைத்தளத்தை (Internet) நீங்கள் திறந்துவிட்டால் நீங்கள் விரும்பிய எந்த ஒரு தகவல்களையும் அதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். Youtube.com, Godtube.com, Google.com போன்றவைகளை நீங்கள் திறந்து பார்த்தால் ஆழம் காணா பெருஞ்சமுத்திரமாக உலகச் செய்திகளும், கிறிஸ்தவ செய்திகளும் நிறைந்து கிடக்கின்றன. FaceBook.com என்றழைக்கப்படும் வதன நூல் அல்லது முகநூல் வலைத்தளத்தை நாம் திறந்தால் நமது விலையேறப்பெற்ற நீண்ட மணி நேரங்களை மலைப்பாம்பு, மானை விழுங்குவது போல தந்திர சாத்தான் நிதானமாக விழுங்கி ஏப்பமிடுவதை கண்கூடாகக் காணலாம். எண்ணிலடங்கா குறும் படங்கள் இங்கே உண்டு. அதில் கிறிஸ்தவ படங்களும் ஏராளம், ஏராளம் உண்டு, நமது ஆத்துமாவை கறைப்படுத்தி அழிக்கக் கூடிய கொடிய ஆபாச படங்களும் இங்கு உண்டு. இந்த நச்சுப்படங்கள் எண்ணற்ற இளைஞர்களை இன்று உலகம் முழுமையிலும் அழித்துக் கொண்டிருக்கின்றன. தேவனுடைய கோபத்திற்கு ஏதுவானவர்கள் இதிலே விழுந்து அழிவது திண்ணம். ஆனால், ஆண்டவருடைய மெய்யான தேவ மக்கள் இவைகளை எல்லாம் கண்ணேறிட்டுக் கூட பார்க்காமல் மோட்ச பிரயாணி கிறிஸ்தியானைப்போல தன் காதுக்குள் விரலை இட்டுக்கொண்டு, ஜீவனே! நித்திய ஜீவனே! என்று கதறிக்கொண்டு தீவிரமாக ஓடி தப்பித்துக் கொள்ளுவார்கள்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post