நேர்த்தியாய் செய்கின்ற தேவன்


அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். - (பிரசங்கி 3:11).

வழிபோக்கன் ஒருவன் வயல்வழியே நடந்து வந்தான். அப்போது பூசணிக்காய் தோட்டத்தில் பெரிய பெரிய பூசணிக்காய்கள் காய்த்து தரையில் கொடி படர்ந்திருந்தது. அதை பார்த்த வழிப்போக்கன், என்ன கடவுளுடைய சிருஷ்டிப்பு, நிமிர்ந்து நிற்க முடியாத செடியில் இவ்வளவு பெரிய பூசணிக்காய்களை உருவாக்கியிருக்கிறார் என சலித்து கொண்டான். இதை சிந்தித்தவாறே நடந்து வந்தான் வெயில் அதிகமாயிருந்ததால் களைப்பின் மிகுதியினாலும் சாலையோரத்திலிருந்த ஒரு ஆலமரத்தின் நிழலில் படுத்தான். படுத்தவன் அயர்ந்த நித்திரை செய்தான். சிறிது நேரத்தில் ஆலமரத்தின் சிறிய பழம் ஒன்று அவன் தலையில் விழுந்தது. பூசணிக்காயை நினைத்துக்கொண்டே படுத்திருந்த அவன் தன் தலையில் பூசணிக்காய் தான் விழுந்து விட்டது என்று அலறி அடித்து கொண்டு எழுந்து பார்த்தபோது ஒரு குட்டி ஆலம்பழம் ஒன்று உருண்டு கிடந்தது. 'இந்த பெரிய மரத்தில் பூசணிக்காய் போன்ற பெரிய பழத்தை படைத்திருப்பீரானால் என் தலை தப்பியிருக்காது. ஞானமான உம் செயலுக்கு நன்றி' என்றான்.

ஆம் நம் தேவன் அனந்த ஞானமுள்ளவர். ஆனால் நாமோ தேவனுடைய செயலை குறை கூறும் வகையில் அநேக காரியங்களில் அதிருப்தி அடைகிறோம். குறிப்பாக ஆண்டவர் கொடுத்த வாழ்க்கைத்துணையிலே, தொழிலே, வேலையிலே ஏன் நமது உருவத்தை நினைத்தே கூட அநேக வேளையில் அதிருப்தியான எண்ணம் கடவுன் மேல் வைக்கிறோம்.

'என் மனைவி அவர்களை போல் சுறுசுறுப்பானவளாகவும், கணவனின் தொழிலில் தோள் கொடுப்பவளாகவும் இருந்தால் நான் என்றோ எங்கோ போயிருப்பேன்' என்று கணவரும், 'என் கணவன் அவரை போல மனைவியை அளவுக்கதிகமாய் நேசித்து அன்பு செலுத்துகிறவராக இருந்தால், இவ்வுலகில் யாருடைய ஆதரவும் எனக்கு தேவையில்லை என உதறியிருப்பேன்' என்று மனைவியும் நினைப்பதுண்டு. யாருடன் யாரை இணைத்தால் அவர்கள் வாழ்க்கை தமக்கும் பிறருக்கும் பிரயோஜனமாய் இருக்கும் என்பதை தேவன் நன்கறிவார். அவர் உங்களுக்கு ஏற்ற துணையைத்தான் தந்திருக்கிறார்; அதுபோல, தொழிலில் வேலையிலும் கூட அந்த வேலை நமக்கு கிடைத்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே, என்னைவிட தகுதியறறவனுக்கு அந்த வேலை கிடைத்திருக்கிறதே, நான் இன்னும் அந்த நிலையிலேயே இருக்கிறேன்' என அவ்வப்போது எண்ணுகிறோம் தேவன் தமது தீர்மானத்தின்படி இந்த வேலையில் உங்களை வைத்துள்ளார். அந்த வேலையிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய அநேக காரியங்கள் உண்டு. ஆகவே நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அது தேவனுடைய செயலே என்று அமரிக்கையோடு அமர்ந்திருங்கள்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post