26-4-2018

நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்.” -எபே.2:10

மேற்கண்ட வசனத்தின் உண்மையைத் தன் வாழ்க்கையின் முடிவுபரியந்தம் நிரூபித்துக் காட்டியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மிஷனெரி மேரி ஸ்லேசர். “சுகாதாரமற்ற, யாராலும் விரும்பப்படாத இடம் ஆப்பிரிக்காவின் காலாபார்! அதுதான் மேரி தெரிந்துகொண்ட முதல் மிஷனெரி தளம். ஏன் அந்தத் தளத்தை யாரும் விரும்பவில்லை?.... அங்கு எப்பொழுதும் மிருகத்தனமான கொலைகளும், சண்டைகளும் நடக்கும். அவர்கள் நரமாம்சம் உண்ணும் பழக்கமுள்ள மக்கள், மண்டை ஓட்டை வணங்குபவர்கள், நரபலி கொடுப்பவர்கள், குற்றவாளிகளை விஷம் உண்ணும்படி செய்து தண்டனை கொடுப்பர். குடித்து, வெறித்து இரவு முழுவதும் நடனம் பண்ணுவார்கள். இரட்டை பிள்ளைகள் பிறந்தால் அவற்றைப் பிசாசின் சந்ததி என்று கொன்றுவிட்டு, தாயைக் காட்டிற்குள் விரட்டி விடுவார்கள். கிராமத்தலைவன் மரித்துவிட்டால் அவன் மனைவி, பிள்ளைகளை வெட்டிப் புதைத்துவிடுவார்கள். 300 ஆண்டுகளுக்கு மேலான அடிமை வியாபாரம் வேறு! இவற்றையெல்லாம் கேள்விப்பட்டும் அந்த மக்களுக்கு இயேசுவை அறிவிக்கத் துடித்தார் மேரி.

முதலில் காலாபாரிலுள்ள பிள்ளைகளுக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுத்தார். ஞாயிறுதோறும் ஓய்வுநாள் பள்ளி நடத்தினார். பிள்ளைகளின் எண்ணிக்கை படிப்படியாக 1000 ஆனது. கிராம மக்களுக்கு சுவிசேஷம் அறிவித்தார். நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து, காயப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்தார். மிருககுணம் கொண்ட அம்மக்களுக்கு சிறிதுசிறிதாக சுவிசேஷம் அறிவித்து, அவர்களது தீய பழக்கவழக்கங்களை கொஞ்சம்கொஞ்சமாய் மாற்றினார். கொல்லப்படப்போகும் இரட்டைப்பிள்ளைகளை மீட்டு வளர்த்தார். கிராமங்களுக்கிடையே சண்டை மூளப்போவதைக் கேள்வியுற்றால் தைரியமாக அந்த இடங்களுக்குச் சென்று சண்டையை நிறுத்தினார். பல கிராமத்தலைவர்களுக்கு நம்பிக்கையுள்ள ஆலோசனைக்காரியானார். எல்லோருக்கும் அவர் நீதிபதியாகவும், ஆசிரியையாகவும், மருத்துவராகவும், நண்பராகவும் விளங்கினார். மரணப்படுக்கையிலும் கூட அம்மக்களுக்காக ஜெபிப்பதிலேயே நேரம் செலவிட்டார். தேவனுடைய அன்பின் கிரியைகளை அம் மக்கள் மேரியிடம் கண்டார்கள்.

அன்பானவர்களே! கிறிஸ்துவின் நற்செய்திக்கு கதவடைத்து அது தங்களுக்குத் தேவையில்லை என எண்ணத்துணியும் மக்கள் இனங்களுக்கு, நற்செயல்கள் மூலம் நற்செய்தியை அறிவிப்பது மிகவும் பலனுள்ளது. ஆம், நம் வார்த்தையை விட வாழ்க்கையே அதிகமாய் பேசும். மிஷனெரி மேரி அதில் வெற்றி கண்டார். நம்மைக் குறித்து என்ன? நற்கிரியைகளை செய்வதற்காகவே நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நினைத்ததுண்டா? மேரியின் பணித்தளம் காலாபார்; உங்களுடைய பணித்தளம் வீடோ, பள்ளியோ கல்லூரியோ, அலுவலகமாகவோ இருக்கலாம். இருக்கும் இடத்தில் நற்கிரியைகளைச் செய்து தேவனுடைய செய்கையாயிருப்போம். நாம் சிருஷ்டிக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவோம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post