கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு,



கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” – சங்.55:22

நியூஹெப்ரைட்ஸ் தீவுகளில் ஊழியம் செய்து வந்த ஜான் பேட்டன் எனும் நற்செய்திப் பணியாளர் அந்நாட்டு மொழியில் யோவான் சுவிசேஷத்தை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். அந்த மொழியில் “விசுவாசம்” என்ற சொல்லுக்கு சரியான வார்த்தையைத் தேடிக்கொண்டிருந்தார். ஆனால் கிடைக்காதபடியால் மொழிபெயர்ப்பில் தடங்கல் உண்டாயிற்று. சோர்ந்துபோய் சரியான வார்த்தை கிடைக்கும்படி ஜெபித்துக்கொண்டிருந்தார். ஒருநாள் ஒருவர் தொலைவிலிருந்து கரடுமுரடான பாதைகளைத் தாண்டி நடந்து வந்து டாக்டர் பேட்டனுடைய அலுவலகத்தில் மிகுந்த களைப்புடன் உட்கார்ந்தார். அவர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, எதிரேயுள்ள நாற்காலியை இழுத்து தன் இரண்டு கால்களையும் அதன்மேல் தூக்கி வைத்துக்கொண்டார்.

என் உடல்பாரம் (வலிகள்) முழுவதையும் இந்த இரு நாற்காலிகளில் வைத்துவிட்டேன் என்று சொன்னார். “என் பாரம் முழுவதையும் வைத்திருக்கிறேன்” என்பதற்கு அவர் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினார். பேட்டனுக்கு ஒரே சந்தோஷம்! இதுதான் நான் எதிர்பார்த்த வார்த்தை எனத் துள்ளிக் குதித்தார். அதை பயன்படுத்தி யோவான் சுவிசேஷத்தை மொழியெர்த்து முடித்தார்/

ஆம், விசுவாசம் என்றால் நம் பாரம் முழுவதையும் தேவன் மேல் வைத்து விடுவதுதான். அவர் மேல் நம்முடைய வாழ்க்கையின் பாரத்தை வைத்துவிட்டால் நாம் எதற்கும் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை. அவர் நம்மை ஆதரிப்பார். நாம் தள்ளாடும்படி ஒருநாளும் தேவன் அனுமதிக்கவே மாட்டார்.

எனக்கன்பானவர்களே! நாம் வாசித்த வேதபகுதியில் அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றது போல நமது அனுதின ஜெபமும் இருக்கட்டும். நம்மை தம் உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிற தேவன், நம் பாரங்கள், கவலைகள், பிரச்சனைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1பேதுரு 5:7) என்ற வசனத்தின்படி தேவன் மீது நம் பாரங்களை வைத்துவிட்டு, தெளிந்த புத்தியுடன், விழித்திருந்து ஜெபித்து, தேவனை விசுவாசித்து, எதிரியான பிசாசை ஜெயித்து வெற்றியுடன் வாழ்வோம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post