குறை கூறாதிருப்போம்
உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள் சொல்லித் திரியாயாக. - (லேவியராகமம்: 19:16).
அன்று ஆதாம் துவங்கி, இஸ்ரவேல் ஜனங்களை தொடர்ந்து, இன்று நம் வரை பிறரை குறை கூறுதல் என்பது நம் இரத்த்தோடு கலந்த ஒரு குணமாகி விட்டது. பிறரை குறித்த குறைவுகளை கேட்ட வேண்டுமென்றால் பால்கோவா சாப்பிடுவதை போல இனிமையும், அடுத்த வாய் வைப்பதற்குள் நாக்கில் எச்சில் ஊறும் அனுபவமுமாகி விட்டது. பிறரை குறை கூறுவது அவர்களை அற்பமாய் எண்ணுவதற்கு சமமானதாகும். பிறரை குறை கூறும் முன் நம்மிடம் இப்படிப்பட்ட குறைவுகள் காண்ப்படுகின்றதா என்று பார்ப்பதில்லை. நம்மிலுள்ள நிறைவுகளை மாத்திரம் பார்த்து குறைவுகளை மறந்து விடுகிறோம். மற்றவர்களிடமுள்ள குறைவுகளை மாத்திரம் பார்த்து அவர்களின் நிறைவுகளை மறந்து விடும் இயல்புடையவர்களாக காணப்படுகிறோம்.
ஆனால் வேதம் நமக்கு போதிப்பது என்னவெனில், 'மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்' - (பிலிப்பியர் 2:3). உதாரணமாக ஒரு கிராம சபையில் சிறிய உதவி செய்து கொண்டிருக்கிற நபரை கண்டு, இவர்; என்ன செய்கிறார் என்று அற்பமாய் எண்ணி அவரது பணியை குறை கூற வாய்ப்புண்டு, ஆனால் தேவன் அந்த குறிப்பிட்ட உதவியை செய்யும்படி அவரை அங்கு வைத்திருக்கிறார். அந்த பணியை நாம் செய்யவில்லை. எனவே அந்த நபரை குறை கூறுவது சரியல்ல.
'இயேசுவிடம் வந்த ஐசுவரியவானான வாலிபன் ஆண்டவரின் வார்த்தையை கேட்டு துக்கமடைந்தவனாய் போய்விட்டான். இதேப்போலத்தான் இன்றைய செல்வந்தர்களும் காணப்படுகிறார்கள்' என அநேக சந்தர்ப்பங்களில் பணக்காரர்களை குறை கூறுகிற நாம் 'உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்கு கொடு, பின்பு என்னை பின்பற்றி வா' என்று இயேசு நம்மிடம் கூறுவாரானால், உண்மையில் நம்மில் எத்தனை பேர் பின்பற்றுவோமோ தெரியாது.
பிரியமானவர்களே, மற்றவர்களின் குறைவுகளை கேட்க இவ்வுலகத்தாரை போல தீவிரப்பட வேண்டாம். நம்முடைய குறைகளை பின்னுக்கு தள்ளி, பிறரது குற்றங்களை பிரகடனப்படுத்தி திரியும் குணமும் வேண்டாம். பிறரது தவறுகளை அக்கம் பக்கத்தில் தெளிவாய் விசாரித்து, அவர்களை நமது இருதயத்தில் அற்பமாய் எண்ணும் பாவத்திற்கு இடங்கொடாதிருப்போம். வேதம் கூறுகிறது, 'தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்' - (1 கொரிந்தியர் 10:12). ஆகவே நம்மில் காணப்படும் சின்ன சின்ன குறைவுகளையும் அலட்சியம் செய்யாமல் சரி செய்வோம். பிறரை அற்பமாய் எண்ணாமல் நம்மிலும் மேன்மையுள்வர்களாக எண்ணுவோம். அப்படிப்பட்ட சிந்தை நமக்கும் வளருமானால் ஒரு நல்ல ஆவிக்குரிய ஓட்டத்தை நாம் ஓடி முடிக்க முடியும். ஆமென்
Post a Comment