நம் கண்ணீருக்குப் பதில் செய்கிறவர்

உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்;… – 2இரா.20:5 

பரலோகத்தில் இருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட இரண்டு தேவ தூதர்களைப் பற்றிய செய்தியை இன்று வாசிக்கப்போகிறோம். இவர்கள் இருவரும் பூமியின் பல இடங்களில் இருந்து செய்திகளை எடுத்துக்கொண்டு பரலோகம் சென்றனர். அதில் ஒரு தேவ தூதனுடைய கையில் தண்ணீர் நிறைந்த பாட்டில் இருந்தது. தேவன் அவனைப் பார்த்து, “உன் கையில் இருப்பது என்ன?” என்றார். தேவதூதன் பிரதியுத்தரமாக “இது பூமியில் ஒரு தேவபிள்ளையினால் சிந்தப்பட்ட கண்ணீர் ஆகும். இதை தரையில் சிந்தவிடாமல் பத்திரமாய் எடுத்து வந்துள்ளேன்” என்றானாம். தேவன் அவனுக்கு மறுமொழியாக, “உடனே அக்கண்ணீருக்கு காரணமான தேவையை அறிந்து பதில் செய்யுங்கள்” என்றாராம். ஆம், பூமியில் நாம் சிந்துகிற ஒவ்வொரு கண்ணீர் துளிக்கும் பதில் உண்டு என்பதை மறந்துவிடவேண்டாம்.

வேதாகமத்திலும் இதைப் போன்று கண்ணீர் சிந்தி தேவனிடம் இருந்து பதிலைப் பெற்றவர்கள் ஏராளம். இன்றைய வேதப்பகுதியில் வாசிக்கின்ற ஆகாரின் அங்கலாய்ப்பை தேவன் கேட்டார் என வாசிக்கிறோம். மலடியாயிருந்த அன்னாள் தனக்கு குழந்தை பாக்கியத்திற்காக அழுது ஜெபிப்பதைக் கண்ட ஆண்டவர் அழகான ஆண் குழந்தையைக் கொடுத்து ஆசீர்வதித்ததைப் பார்க்கிறோம். மரணத்துக்கேதுவான வியாதியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த எசேக்கியா இராஜாவின் கண்ணீருக்கு தேவன் இரங்கியதையும் நாம் வாசிக்கிறோம். இதைப் போன்றதான உயிருள்ள சாட்சிகள் இன்றும் அநேகம் உண்டு. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான். தேவனே, நொறுங்குண்டதும், நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் என வாசிக்கிறோம். (சங்.51:17) உடைந்த உள்ளத்தோடு தேவனுடைய பாதத்தில் சிந்தப்படுகிற கண்ணீர் தேவனுடைய பார்வையில் மிக முக்கியமாய் பார்க்கப்படுகிறது. இச்செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிற நீங்கள் மனுஷரிடத்தில் அல்ல; தேவனிடம் உங்கள் கண்ணீரைச் சிந்துங்கள். இதற்கு பலன் உண்டு.

சங்கீதம் 84ல் அழுகையின் பள்ளத்தாக்கைப் பற்றிக் காணலாம். இன்றைக்கும் அநேகர் இப்பள்ளத்தாக்கின் வழியே கண்ணீருடன் சென்று கொண்டிருக்கின்றனர். அது வியாதியின் அகோரமாக இருக்கலாம், கடன்சுமை, பிள்ளைகளின் எதிர்காலம் போன்ற குடும்ப சூழ்நிலையும் அநேகரை வருத்தப்படுத்திக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்வதென்றால் வெளியே யாரிடமும் சொல்லமுடியாமல் தனக்குள்ளே அழுது கொண்டிருப்போரும் உண்டு. உங்களுடைய எல்லா நிலைகளையும் தேவன் நன்கறிவார். அவர் நம்மைக் காண்கிற தேவன். நம் கண்ணீருக்குப் பதில் செய்கிறவர். நீங்கள் ஆறுதலடைவீர்கள். உங்களை அழைத்தவர் முற்றுமுடிய நடத்திச்செல்வார். விசுவாசமாயிருஙகள்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post