ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்

ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்”. – ஆதி.25:34 

ஒரு குட்டிப் பெண் குழந்தை, தன் அம்மாவுடன் கடைக்கு சென்றாள். மகள் விரும்பிய மிட்டாயை வாங்குவதற்காக அவளுக்கு ஒரு ரூபாய் கொடுத்திருந்தாள் அம்மா. கடையில் கலர் கலராய் மிட்டாய்கள் கண்ணாடி பாட்டிலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குழந்தை கையை நீட்டி “அந்த மிட்டாயை கொடுங்கள்” என்பாள். கடைக்காரர் எடுக்கும்போது “அது வேண்டாம் வேறொன்று” என்பாள். அதற்குள் மற்றொரு மிட்டாயைப் பார்த்து ‘இல்லை இல்லை இதை கொடுங்கள்” என்பாள். இவ்வாறு பலமுறை தன் தீர்மானத்தை மாற்றியதைக் கண்ட தாய் கோபத்துடன், “சீக்கிரமாய் ஒரு முடிவுக்கு வா” என்றாள். அதற்கு அச்சிறுமி கவலை தோய்ந்த குரலில், “அம்மா என்னிடம் இருப்பது எல்லாம் ஒரு ரூபாய்தானே! அதை நான் வீணாக்கிவிடக்கூடாதல்லவா! என்றாள். என்ன ஞானமான பதில் பாருங்கள்! 

ஆம், நம்மிடமுள்ளதும் ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே! அதை ஞானமாய் செலவிட வேண்டும். நாம் படிக்கும் படிப்பையோ, செய்யும் வேலையையோ, ஏன் நம் வாழ்க்கையையும் அலட்சியமாய் எண்ணி விடக்கூடாது. வேதத்திலே ஏசா என்ற வாலிபன் தனக்கே உரிய ஒன்றை அலட்சியம் பண்ணிவிட்டான் என வேதம் சொல்லுகிறது. ஏசா அலட்சியம் பண்ணியது எதை? மூத்தமகனாய் பிறந்தவர்களுக்கு குடும்பத்தால் கொடுக்கப்படும் மாறாத அந்தஸ்து அல்லது சொத்து! இதை தேவனே கூறியுள்ளார். ஆனால் ஏசாவோ பசியைப் போக்க, ஒரு வேளை கூழுக்காக தன் உரிமையை விற்றுப் போட்டுவிட்டான். இதை மாத்திரமல்ல, இறுதியில் தகப்பன் கொடுக்கும் ஆசீர்வாதத்தையும் இழந்து போனான். தனக்கு தேவனும், குடும்பமும் கொடுத்த ஒரே வாய்ப்பை வீணாக்கிவிட்டான்.

நண்பரே! ஒரே வாழ்க்கை. ஒரே வாய்ப்பு! வீணாக்கிவிட்ட நேரத்தையும், வாய்ப்பையும் நாம் மீண்டும் பெறமுடியாது. இந்த வாக்கியத்தை உள்ளத்தில் எழுதி, பதிய வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள உங்கள் கையிலிருக்கும் படிப்பையோ, வேலையையோ அல்லது சொற்ப பணத்தையோ அலட்சியப்படுத்தாமல் வெற்றியாய் வாழ இவற்றை வாய்ப்பாய் பயன்படுத்துங்கள். வாழ்க்கையில் சாதிப்பதற்கும், வீணாய் கழிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இன்பத்தை அளிக்கவும், துன்பத்தைக் கொடுக்கவும் இவ்வாழ்வினால் முடியும். நீங்கள் எதை தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்? நமக்கோ பல பிறவிகள் இல்லை! ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே! அதுவும் நான்கு விரற்கடை அளவுதான்! ஆகவே இந்த ஒரே வாழ்வை தேவனிடம் அர்ப்பணித்து, பரிசுத்தமாய், உண்மையாய், மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாய், முன்மாதிரியாய் வாழ தீர்மானிப்போம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post