தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது

தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது...” - 2தீமோ.2:19

ஐரோப்பா தேசமொன்றிலே மிகப்பெரிய கட்டிடம் ஒன்று நவ நாகரீகமான முறையில் கட்டப்பட்டு வெகு நேர்த்தியாய்க் காணப்பட்டது. ஆனால் அது யாருக்கும் உபயோகமில்லாமல் அரசாங்கத்தினால் முத்திரை(seal) போடப்பட்டிருந்தது. காரணமென்னவென்றால் அவ்வீட்டைக் கட்ட ஆரம்பிக்கும்போது ஒருவர் வாங்கின லஞ்சத்தின் விளைவாக மிகவும் மோசமாக அஸ்திபாரம் போட்டு விட்டார்கள். அஸ்திபாரம் உறுதியானதா என்று கவனிக்காத எஞ்ஜினியர்கள் அதின் மேல் மிக வேகமாக கட்டிடத்தைக் கட்டி எழுப்பினார்கள். ஆனால் சில நாட்களுக்குள்ளேயே கட்டிடம் ஆட்டம் கண்டது. இதற்கான காரணம் இதை பொறுப்பெடுத்து செய்தவருக்கு உத்தம குணமில்லை. தங்களது உண்மைத் தன்மையை லஞ்சத்திற்கு விற்றுவிட்டார்.
அதேபோல சரியான குடும்ப உறவுகளைக் கட்டி எழுப்புவதற்கு சரியான அஸ்திபாரம் தேவை. ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தின் அஸ்திபாரம் (கொலோ.3:18-21) வரை அடங்கியுள்ளது. அவைகள் கணவன் மனைவியிடம் அன்புகூருவதும், மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிவதும், பிள்ளைகள் பெற்றோர்களுக்கு கீழ்ப்படிவதும் மற்றும் பெற்றோர் பிள்ளைகளை கோபமூட்டாதிருத்தலும் ஆகும். 

குடும்பத் தலைவன் தேவையில்லாத காரியத்திற்கு கோபப்படுவது, ஆணவமாய் நடந்து கொள்வது, அளவுக்கதிகமாய் அதிகாரம் செலுத்துவது போன்றவை குடும்பக் கட்டுமானத்தைக் கெடுக்கும். அதுபோல மனைவி குடும்பத்தின் அதிகாரி போல நடக்கிற வீடுகள் உண்டு. குறிப்பாக மனைவி கணவனைவிட கூடுதல் சம்பளம் வாங்கும்போது இப்பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகம். வேதத்தின்படி கணவனே குடும்பத்தின் தலையாக இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அஸ்திபாரம் ஆட்டம் காணும். அதைப்போல பிள்ளைகளை கீழ்ப்படிய சிறுவயது முதல் பயிற்றுவிக்க வேண்டும். தேவையானால் வசனத்தின்படி பிரம்பையும் பயன்படுத்தக்கூடிய உறுதி பெற்றோருக்குத் தேவை. அதே நேரத்தில் பிள்ளைகளிடம் அன்பும் செலுத்த வேண்டும்.

பிரியமானவர்களே! வேத வசனத்தின்படி அமைக்கப்படும் குடும்பம் உறுதியாக அஸ்திபாரம் போடப்பட்ட வீட்டைப் போன்றது. அவ்வப்போது சிறு சிறு ரிப்பேர்கள் வரலாம். ஆனால் வீடோ அசையாது. ரிப்பேர்களை வசனத்தின் மூலம் சரிப்படுத்திவிடலாம். கணவன், மனைவி, பிள்ளைகள் இவர்களுக்கு தேவன் கொடுக்கும் இந்த எளிய ஆலோசனைகளை கைக்கொள்ளுவோம், அசையாத அஸ்திபாரமுள்ள குடும்பமாயிருப்போம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post