இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும்

இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும்; உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும்...” - உபாகமம் 33:25

சமீபத்தில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது, பெரியவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர், தன்னுடைய பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டதாகவும், தான் தனக்கு வருகிற பென்சன் பணத்தில் திருப்தியாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். என்னைக் குறித்து விசாரித்தபோது நான் ஒரு மிஷனெரி என்றும், இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர் என்றும் சொன்னேன். “வீடு கட்டிவிட்டீர்களா? பிள்ளைகளின் படிப்பிற்கு டெபாசிட் செய்துவிட்டீர்களா? அவர்களின் திருமணத்திற்கு டெபாசிட் செய்துவிட்டீர்களா?” என்று அநேக கேள்விகளைக் கேட்டார். அவருடைய எல்லா கேள்விகளுக்கும் எனது பதில் “இல்லை, கர்த்தர் பார்த்துக்கொள்வார்” என்பதாக இருந்தது. “என் தேவன் இதுவரை அதிசயமாய் நடத்தி வந்திருக்கிறார்; இனியும் நடத்துவார்” என்று கூறினேன். அவருடைய கண்ணோட்டத்தில் அவரால் இதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், உண்மை இதுதான்! உலகத்தாரின் பார்வை வேறு, நம் பார்வை வேறு! ஏனெனில் நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்.

உங்களில் அநேகர் கூட பிள்ளைகள், அவர்களின் எதிர்காலம் என அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாம். நம்முடைய தேவன் யேகோவாயீரே! எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிற ஆண்டவர். ஒருவேளை வாழ்க்கையின் பாதைகள் கடினமாய் இருந்தாலும், எதிர்காலத்தை நினைக்கும்போது கலக்கங்கள் அவ்வப்போது வந்தாலும், நம்மை நடத்திச் செல்லும் கர்த்தர் நம்முடனே வருகிறார் என்ற விசுவாசம் நமக்கு வேண்டும். இன்றைய தியான வசனம்: இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழ் இருக்கும். இது ஆசேருக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம். ஆசேர் வாழ்ந்த பகுதி மலைப்பகுதி. கரடுமுரடான கற்களையுடைய பாதைகளில் அவன் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. ஆகவே இரும்பினாலும், வெண்கலத்தினாலும் பாதரட்சைகளைப் பெலப்படுத்துகிறார். வசனத்தின் பின்பகுதியில் உன் நாட்களுக்குத் தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்று வாசிக்கிறோம். தற்போது உடல் பெலவீனத்தோடு, சோர்வோடு நீங்கள் காணப்படலாம். ஆனால் உங்கள் வயதுக்குத் தக்கதாக உங்கள் பெலனும் இருக்கும். ஆகையால் சரீர பெலவீனங்களைக் குறித்தும் சோர்ந்து போகவேண்டாம். 

ஆம், 2017ம் ஆண்டு வரை நடத்தின தேவன், வருகிற 2018ம் ஆண்டும் நடத்துவார். பெலவீன நேரத்தில் பெலன் தருவார், சோர்வில் தைரியப்படுத்துவார், உபத்திரவ நேரத்தில் உதவி செய்வார், சோதனைகளை மேற்கொள்ள பெலனையும், தப்பிச்செல்ல வழியையும் உண்டாக்குவார். பிள்ளைகளின் காரியத்தை பொறுப்பெடுத்துக்கொள்வார். கரடான பாதையில் நடக்க நம் கால்களை பெலனும், பாதரட்சையை இரும்புமாய் மாற்றுவார். உலகத்தார் அசெளகரியமற்ற சிறப்பான பாதையை தெரிந்துகொள்ள விரும்புவர். நாமோ தேவன் நமக்கு நியமித்த பாதையில், அவரோடு அவர் தரும் பெலத்தோடு செல்வோம். மகிழ்வாய் வாழ்வோம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post