கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்

“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்;...” – சங்கீதம் 23:1

23ம் சங்கீதத்தை சங்கீதங்களுக்குள் உன்னதமான சங்கீதம் என்று சொல்லலாம். இந்த சங்கீதம் சிலுவையைக் குறிக்கும் சங்கீதத்திற்கும், சிங்காசனத்தைக் குறிக்கும் சங்கீதத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. அதாவது 22ம் சங்கீதம் நல்ல மேய்ப்பன் ஜீவனைக் கொடுத்து இரட்சிப்பதை நிழலாட்டமாய் எடுத்துரைக்கிறது. 24ம் சங்கீதம் பிரதான மேய்ப்பன் திரும்ப மகிமையாய் வரப்போகிறதை எடுத்துரைக்கிறது. இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள இச்சங்கீதம் நல்ல மேய்ப்பன் நம்மை ஒவ்வொரு நாளும் அன்பாய் மேய்க்கிறதை அருமையாய், அழகாய், மனதைத் தொடும்படி, நமது சிந்தையில் நிலைத்திருக்கும்படி எழுதிவைக்கப்பட்டுள்ளது.

இந்த மேய்ப்பன் கூலியாளல்ல, ஆபத்தைக் கண்டால் நம்மைவிட்டு ஓடமாட்டார். எந்த ஒரு விலைக்கிரயத்தையும் கொடுத்து ஆடுகளைக் காக்க தன்னை ஒப்புக்கொடுத்த நல்ல மேய்ப்பர். அவரது சத்தத்தை அறிந்த ஆடுகள் அவருக்குப் பின் செல்லும். இந்த சங்கீதம் பார்ப்பதற்கு சிறுபிள்ளைகள் பள்ளியில் படிக்கும் ரைம்ஸ் போல எளிமையாக இருந்தாலும், பிரதான தூதர்களும் பாடும் பாடலிலும் ஆழமான கருத்துடையது. 

சிறிய பனித்துளி மகிமையான சூரியனைப் பிரதிபலிப்பதைப் போல இச்சிறு சங்கீதம் தேவனுடைய மகிமையான அன்பை பிரதிபலிக்கிறது. விலையேறப்பெற்ற வைரக்கல்லுக்குள் ஒளி ஒவ்வொரு திசைகளிலிருந்தும் பாயும்போது விதவிதமான வண்ணங்களில் அழகாய் வெளிப்படுவது போல இச்சங்கீதத்தை நாம் ஒவ்வொரு முறையும் ஜெபத்தோடு தியானிக்கும் போது தேவனுடைய மகிமை பல வண்ணமாக நம்முடைய வாழ்வை நிரப்பும்.

இந்த சங்கீதம் பாலைவனத்தில் ஒரு சோலையைப் போன்றது. பகலின் வெயிலிலே குளிர்ந்த நிழலுக்கு ஒப்பானது. கலங்கிய மனதை தெளிந்த நீரோடையைப் போல மாற்றவல்லது. இளைத்தோர்களே, களைத்தோர்களே, வருந்தி பாரம் சுமப்போர்களே வாருங்கள். இந்த குளிர்ச்சியான நிழலில் வந்து அமருங்கள். இதிலிருந்து வெளிப்படும் இனிய இசையோடு கூட உங்கள் தியானத்தை துவக்குங்கள். சமாதானம் நதியைப் போல வந்து உங்களை மூடும். அதுமட்டுமல்ல இச்சங்கீதம் சிலுவைக்கு நேராகவும் பின்பு அங்கிருந்து நம்மை மகிமைக்கு நேராகவும் அழைத்துச் செல்லும் என்பதும் நிச்சயம்.

கர்த்தரை மேய்ப்பராக ஏற்றுக்கொண்டுள்ள நாம் எவ்வளவு பாக்கியவான்கள். அல்லேலூயா!
- ஆமென்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post