ஒரு பிள்ளையின் வேண்டுதல்

“பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” - எபே. 6:4

அன்புள்ள அம்மா, அப்பா,
நான் கேட்பதையெல்லாம்  தராதீர்கள். அது உங்கள் பெலவீனம். ஆனால் என்னை அது அழித்து விடும்.

கண்டிப்பாயிருக்க மறந்து விடாதீர்கள். அவை எனக்கு அதிக எச்சரிப்பைக் கொடுக்கும்.

என்மீது நம்பிக்கை வைத்திருங்கள். அது எனக்கு உங்கள் மீதும் நம்பிக்கையைப் பெருகப்பண்ணும்.

எப்பொழுதும் என்னில் குற்றம் கண்டுபிடிக்காதிருங்கள். அது என்னை மிகவும் சோர்ந்து விடச்செய்யும்.

என்னுடைய திறமைகளைச் சரியாக புரிய முயலுங்கள். அது என் மேல் வைக்கும் தேவையற்ற எதிர்பார்ப்புகளை களைய உதவும்.

எனது கேள்விகளைத் தூக்கி எறிந்து விடாதீர்கள். நான் வேறெங்காவது பதில் தேடி தவறான பதிலை அடையச் செய்திடக் கூடும். 

பிறர் முன் என்னை விமர்சிக்காதீர்கள். அது என்னை அவமானத்தில் ஆழ்த்தி உங்களையே வெறுக்கச் செய்யும்.

குடும்ப ஜெபம், வசன மனப்பாடம், காலந்தவறாமை, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுதல் ஆகியவற்றை ஒருபோதும் விட்டு விடாதீர்கள். 

நீங்கள் ஏதாவது ஒரு காரியத்தில் தவறும்போது அதை ஒத்துக்கொள்ள தயங்காதீர்கள். அது உங்கள் மேல் எனக்கு மதிப்பை அதிகரிக்கச் செய்யும். 

எனக்காக தேவனை வஞ்சித்து பணம் சம்பாதிக்காதீர்கள்.

எனக்கான நேரத்தை வேலைக்கும், தொலைக்காட்சிக்கும் கொடுக்காதீர்கள்.

எனக்கு முன்பாக ஆவிக்குரியவர்களாக நடிக்காதீர்கள். அது என்னையும் அத்தகைய நடிகனாக்கும்.

நீங்கள் இருவரும் சண்டையிடாதீர்கள். அது என் மனதை பாதித்து எதிலும் கவனம் செலுத்த முடியாதபடி என்னை மாற்றி விடுகிறது. 

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் ஆண்டவருக்கு முதலிடம் கொடுங்கள். நானும் அவ்வாறே செய்ய உதவும்.

அன்பு பெற்றோர்களே! மேலே நீங்கள் வாசித்த ஒரு பிள்ளையின் வேண்டுதலை உங்கள் சொந்த பிள்ளையின் வேண்டுதலாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்ற பிரயாசப்படுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த நண்பன், முதல் ஆசிரியர் நீங்களாக இருங்கள். கர்த்தருக்கு பயப்படும் ஒரு சந்ததியை உருவாக்குங்கள்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post