வெளிப்பாட்டின் ஏழு எக்காளங்கள்-தொடர்ச்சி.
எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
2 தெசலோனிக்கேயர் 2:3
அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
2 தெசலோனிக்கேயர் 2:4
முந்தைய முந்தைய ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகளைக் குறித்துப் பார்த்தோம். அந்த நியாயத்தீர்ப்புகள் நடந்துக் கொண்டிருக்கும்போதே உலகத்தில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அவைகளைக் குறித்து காண்போம்.
2 தெசலோனிக்கேயர் 2:3
அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
2 தெசலோனிக்கேயர் 2:4
இரண்டாவதான மூன்றறை வருட மகா உபத்திரவ காலம், ‘பாழாக்கும் அருவருப்பு’ என்று இயேசுகிறிஸ்துவினால் வருணிக்கப்பட்ட அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலை ஆக்ரமிப்பதிலிருந்து தொடங்குகிறது. அவன் உதவியுடன் கட்டப்பட்ட தேவாலயத்தில், அவன் தேவன் போல் உட்கார்ந்து, எல்லா யூத மற்றும் கிறிஸ்தவ ஆராதனைகளின் முறைமைகளையும் ஒழியப்பண்ணுவான். அவனே அவர்கள் எதிர்ப்பார்த்திருக்கிற மேசியா என்றுச் சொல்லி தன்னை அனைவரும் வணங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவான். அப்போதுதான் யூதர்களுக்கு இவன் அந்திக்கிறிஸ்து என்றும், இயேசுகிறிஸ்துவே மேசியா என்றும், தெரிய வரும். அவன் கடைசி மூன்றறை வருடங்கள் எருசலேமிலிருந்து ஆட்சி செய்வான். அப்போது யூதர்களின் மகா உபத்திரவ காலம் தொடங்கும். ‘மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்... ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்து கொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்’ (மத்தேயு 24:15,16,21,22) என்று இயேசுகிறிஸ்து இதைக்குறித்து முன்னமே எச்சரித்திருக்கிறார்.
வலுசர்ப்பம் என்னும் சாத்தான் வானத்திலிருந்து பூமியிலே தள்ளப்படுவான். ‘வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்’ - (வெளி 12:7-9).
தேவன் ஆதியிலே வானத்தையும் பூமியையும் படைத்தார் என்று ஆதியாகமம் 1:1 கூறுகிறது. அந்த வானத்தில் மூன்று வானங்கள் உண்டு.
1. நாம் சுவாசிக்கிற காற்று, மேக மண்டலம் சூழ்ந்த நாம் காண்கின்ற வானம்.
2. சாத்தானும் அவனது தூதர்களும் வசிக்கின்ற இரண்டாவது வானம். அதுதான் எபேசியர் 6:12ல் வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3. தேவனும் அவருடைய சிங்காசனமும் இருக்கின்ற மூன்றாவது வானம். ‘கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்’ என்று பவுல் அப்போஸ்தலன் தன்னைக் குறித்து எழுதுகிறதைக் காண்கிறோம்.
இரண்டாவது வானத்தில் தேவனுடைய தூத சேனைகளின் தலைவனாகிய மிகாவேலும், அவனுடைய சேனைத்தூதர்களும் சாத்தானோடும் அவனுடைய தூதர்களோடும் யுத்தம் பண்ணுகிறார்கள். அப்போது சாத்தானும் அவனுடைய தூதர்களும் ஜெயங்கொள்ளாமல், இரண்டாவது வானத்திலிருந்து, பூமிக்கு கீழேத் தள்ளப்படுகிறார்கள். அவன் பூமியிலே வரும்போது, மிகுந்த கோபத்துடனே வருகிறபடியால், ஆபத்துவரும் என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, எச்சரிக்கிறது. ‘ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்’ - (வெளி 12:12)
பரிசுத்தவான்களோடே யுத்தம் பண்ணி அவர்களை ஜெயிக்கும்படி அந்திக்கிறிஸ்துவுக்கு அதிகாரம் கொடுக்கப்படும். பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும் படிக்கு அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது (வெளி 13:7). ஆனால் அவனை ஏற்றுக்கொள்ளாமல், கடைசி பரியந்தம் நிலைத்திருக்கிறவர்களே உபத்திரவ காலத்தில் இரட்சிக்கப்படுவார்கள்.
தேவனுடைய பெரிதான கிருபையால் அவருடைய மாறாத நேசத்தால், பூமியிலுள்ள மனிதருக்கு, கடைசி முறையாக சுவிசேஷம் அறிவிக்கப்படும். மூன்று தூதர்கள் அதை அறிவிப்பார்கள்.
வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது: வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான். (வெளி 14:6-7). அந்த தூதன் நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, தேவனுக்கு பயந்து, அவரையே மகிமைப்படுத்துங்கள் என்று அறிவிக்கிறான்.
iவேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான். - (வெளி 14:8) மற்ற தூதன் பாபிலோன் என்னும் அந்திக்கிறிஸ்துவின் முக்கிய வாணிக ஸ்தலத்திற்கு வரும் ஆபத்தைக் குறித்து எச்சரிக்கிறான்.
அவர்களுக்குப் பின்னே மூன்றாம்தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்- (வெளி 14:9-10). மூன்றாவது தூதன் அந்திக்கிறிஸ்துவின் முத்திரையை தரித்துக் கொள்வதினால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து எச்சரிப்பான்.
தேவனுடைய இரண்டு தீர்க்கதரிசிகளாகிய ஏனோக்கும் எலியாவும் தீர்க்கதரிசனம் கூறும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படும். என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு , ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன் (வெளி 11:3). தேவனுடைய இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும், அநேக அற்புதங்களை செய்வார்கள். அவர்களும் ஜனத்தை தேவனிடம் திரும்பும்படி எச்சரிப்பார்கள். அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரைநாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள். அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.
அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள். அந்திக்கிறிஸ்துவினால் கொல்லப்பட்டவர்கள் மோசேயின் பாடலை பாடுகிறதை இந்த வசனங்களில் நாம் காண்கிறோம்.
ஏழு கோபகலசங்களை உடைய ஏழு தூதர்கள் பூமியின் மேல் அவற்றை ஊற்ற தங்களை ஆயத்தப்படுத்துகிறார்கள். ‘அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்’ - (வெளி 15:6).
இவற்றைப் பற்றி அடுத்த தியானத்தில் பார்ப்போம்.
Download our daily bread app on below link.
Post a Comment